மீண்டு வருவோம்: கோஹ்லி நம்பிக்கை | பெப்ரவரி 24, 2020

தினமலர்  தினமலர்
மீண்டு வருவோம்: கோஹ்லி நம்பிக்கை | பெப்ரவரி 24, 2020

வெலிங்டன்: ‘‘வெலிங்டன் டெஸ்டில் கண்ட  தோல்வியில் இருந்து மீண்டு, வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்,’’ என, இந்திய கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுகுறித்து இந்திய கேப்டன் விராத் கோஹ்லி கூறியது: நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பது தெரியும். ஆனால் மக்கள் இதை பெரிய விஷயமாக நினைத்து, பெரிதுபடுத்த விரும்பினால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் அதுபோல நினைக்கவில்லை. சிலர், உலகம் முடிந்துவிட்டதாக எண்ணலாம். எங்களுக்கு அப்படி கிடையாது. ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளோம். இதனை கடந்து, அடுத்து வரும் போட்டியில் கவனம் செலுத்துவோம்.

போட்டியில் வெற்றி பெற சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என்பதை புரிந்து கொண்டோம். சொந்த மண்ணாக இருந்தாலும் கடின உழைப்பு வேண்டும். சர்வதேச போட்டிகளில் வெற்றி அவ்வளது எளிதாக கிடைத்துவிடாது. எனவே இத்தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதில் ஒன்றும் அவமானம் இல்லை.

மற்றவர்கள் பேசுவதை காதில் வாங்கிக் கொண்டால் தற்போதுள்ள நிலையில் இருக்க முடியாது. தரவரிசையில் 7 அல்லது 8வது இடத்தில் தான் இருந்திருப்போம். வெளியில் மக்கள் என்ன கருத்து தெரிவிக்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. ஒரு போட்டியில் கிடைத்த தோல்வியால் மோசமான அணி என்று அர்த்தமில்லை. மக்கள் எங்கள் எண்ணங்களை மாற்ற நினைக்கலாம். ஆனால் அது நடக்காது. கடினமாக உழைத்து அடுத்த டெஸ்டில் வெற்றி பெற்று எழுச்சி காண்போம். இத்தனை வெற்றிக்கு பின் கிடைத்த ஒரு தோல்வியால் எங்களது தன்னம்பிக்கை தகர்ந்துவிடாது.

இப்போட்டியில் ‘டாஸ்’ முக்கிய பங்குவகித்தது. முதல் இன்னிங்சில் 220–230 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பேட்டிங்கில் மயங்க் அகர்வால், புஜாரா நம்பிக்கை அளித்தனர். இப்போட்டியின் மூலம் பிரித்வி ஷா நல்ல அனுபவம் பெற்றிருப்பார். அடுத்த போட்டியில் நல்ல துவக்கம் தருவார் என நம்புகிறேன். நியூசிலாந்து பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். இவர்களுக்கு எதிராக ‘பார்ட்னர்ஷிப்’ அமைக்க தவறிவிட்டோம். எங்கள் பந்துவீச்சு நன்றாக இருந்தது. நல்ல ஸ்கோரை பெற்றிருந்ததால் எங்கள் பவுலர்களுக்கு சாதகமாக இருந்திருக்கும்.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.

மூலக்கதை