நியூசிலாந்து 100வது டெஸ்ட் வெற்றி | பெப்ரவரி 24, 2020

தினமலர்  தினமலர்
நியூசிலாந்து 100வது டெஸ்ட் வெற்றி | பெப்ரவரி 24, 2020

வெலிங்டன்: இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, டெஸ்ட் அரங்கில் தனது 100வது வெற்றியை பதிவு செய்தது.

வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன்மூலம் நியூசிலாந்து அணி, தனது 100வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 441 டெஸ்டில், 100 வெற்றி, 166 ‘டிரா’, 175 தோல்வியை பெற்றுள்ளது.

* இலங்கைக்கு எதிராக அதிகபட்சமாக 16 டெஸ்டில் வென்ற நியூசிலாந்து அணி, விண்டீஸ் (15), பாகிஸ்தான் (12), வங்கதேசம் (12), இந்தியா (11), இங்கிலாந்து (11), ஜிம்பாப்வே (11), ஆஸ்திரேலியா (8), தென் ஆப்ரிக்கா (4) அணிகளுக்கு எதிராவும் வெற்றி பெற்றுள்ளது.

* தவிர டெஸ்ட் அரங்கில் 100வது வெற்றியை பதிவு செய்த 7வது அணியானது நியூசிலாந்து. ஏற்கனவே ஆஸ்திரேலியா (393 வெற்றி), இங்கிலாந்து (371), விண்டீஸ் (174), தென் ஆப்ரிக்கா (165), இந்தியா (157), பாகிஸ்தான் (138)  அணிகள் இம்மைல்கல்லை எட்டின.

10 விக்கெட் வித்தியாசம்

வெலிங்டன் டெஸ்டில் அசத்திய நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக 3வது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன், 1990 (கிறைஸ்ட்சர்ச்), 2002ல் (வெலிங்டன்) இதுபோல வெற்றி பெற்றிருந்தது.

இரண்டாவது முறை

நியூசிலாந்திடம் வீழ்ந்த கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் அரங்கில் 2வது முறையாக முதலில் ‘பேட்டிங்’ செய்து தோல்வியை சந்தித்தது. இதற்கு முன் 2018ல் இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதல் தோல்வி

நியூசிலாந்திடம் சரணடைந்த இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் தோல்வியை பெற்றது. இதுவரை விளையாடிய 8 போட்டியில், 7 வெற்றி, ஒரு தோல்வி என, 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (296 புள்ளி), இங்கிலாந்து (146) அணிகள் உள்ளன.

நியூசிலாந்து அணி 6 போட்டியில் 2 வெற்றி, 4 தோல்வி என, 120 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

9 டெஸ்ட்

வெலிங்டனில் ஏமாற்றிய இந்திய அணி, கடைசியாக 2018ல் (டிச. 14–18) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் தோல்வியடைந்தது. அதன்பின் விளையாடிய 9 டெஸ்டில் (8 வெற்றி, ஒரு ‘டிரா’) தோல்வியை சந்தித்ததில்லை.

20 இன்னிங்ஸ்

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, சர்வதேச அரங்கில் கடைசியாக விளையாடிய 20 இன்னிங்சில் சதமடிக்கவில்லை. கடைசியாக, கடந்த ஆண்டு ஆக., 14ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த விண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 114 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். அதன்பின் 9 ஒருநாள், 9 சர்வதேச ‘டுவென்டி–20’, 2 டெஸ்ட் இன்னிங்சில் சதமடிக்கவில்லை.

ஏற்கனவே இவர், 2014ல் இதுபோல தொடர்ச்சியாக 20 சர்வதேச இன்னிங்சில் சதமடித்ததில்லை.

5வது தோல்வி

நியூசிலாந்திடம் வீழ்ந்த இந்திய அணி, வெலிங்டன் மைதானத்தில் 5வது தோல்வியை பதிவு செய்தது. இங்கு விளையாடிய 8 டெஸ்டில், ஒரு வெற்றி (1968), 2 ‘டிரா’ (2009, 2014), 5 தோல்வியை (1976, 81, 98, 2002, 2020) பெற்றது.

மூலக்கதை