வடகிழக்கு டெல்லியில் அனைத்து தரப்பினரும் அமைதி நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ஆளுநர் அனில் பைஜால்

தினகரன்  தினகரன்
வடகிழக்கு டெல்லியில் அனைத்து தரப்பினரும் அமைதி நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ஆளுநர் அனில் பைஜால்

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் சட்டம் - ஒழுங்கை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஷாகீன்பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை  நடத்தி வருகின்றனர். அவர்கள் பொது மக்களுக்கு இடையூறாக சாலையை மறித்துள்ளதால்,  மாற்று இடத்திற்கு சென்று போராட்டத்தை தொடர உச்ச நீதிமன்றம்  அறிவுறுத்தியது. இதற்காக போராட்டக்காரர்களுடன் பேச சமரசக்குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டனர். ஆனால், இந்தகுழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் அங்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியின் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது காவல்துறை. டெல்லி மஜ்பூரில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காவலர் ரத்தன்லால் உயிரிழந்துள்ளார் என தகவல் தெரியவந்துள்ளது.இந்த நிலையில், வடகிழக்கு டெல்லியில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய டெல்லி காவல் ஆணையரை அறிவுறுத்தியுள்ளதாக டெல்லி ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய ஆளுநர், அனைத்து தரப்பினரும் அமைதி நல்லிணக்கத்தை பேண வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, ”டெல்லியில் சில இடங்களில் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடைபெறுவதாக வரும் செய்திகள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை