இமாச்சலப்பிரதேசத்தில் நிலவும் ரம்மியமான சூழல்: பனிப்பொழிவை பெருமளவில் அனுபவிக்க குவியும் சுற்றுலா பயணிகள்!!!

தினகரன்  தினகரன்
இமாச்சலப்பிரதேசத்தில் நிலவும் ரம்மியமான சூழல்: பனிப்பொழிவை பெருமளவில் அனுபவிக்க குவியும் சுற்றுலா பயணிகள்!!!

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் பனிப்பொழிவுடன் நிலவி வரும் ரம்மியமான சூழலை ரசிக்க சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்து வருகிறார்கள். கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் இமாச்சலப்பிரதேசத்திலும் அதன் தாக்கம் தெரிய தொடங்கியுள்ளது. ஆனால் சீசன் முடியும் தருவாயிலும் பனிப்பொழிவை சந்தித்துள்ள குலு மற்றும் மணாலி பகுதிகள் சுற்றுலா பயணிகளை வெள்ளை கம்பளம் விரித்து வரவேற்கின்றன. பரந்து விரிந்து கிடக்கும் மணாலி பள்ளத்தாக்கை கண்டு ரசிப்பதற்கும், குலுமையான சூழலை அனுபவிக்கவும் புதுமண தம்பதிகளின் வருகை அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு முதல் முறையாக புதுவித அனுபவத்தை அளிக்க மக்கள் குடும்பத்துடன் வருகின்றனர். இளைஞர்கள் பனிக்கட்டிகளை வீசியெறிந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். வழக்கம் போல பனி விளையாட்டுகள், சுற்றுலா பயணிகளையும், சாகச விரும்பிகளையும் கவர தவறவில்லை. தொடர்ந்து, குலு பகுதியிலுள்ள சோலாங் பள்ளத்தாக்கிலும் ஒரு ரவுண்ட் அடிக்கும் சுற்றுலா பயணிகள் அங்கு பாராகிளைடிங் பயணத்தை மேற்கொள்கின்றனர். காஷ்மீரில் அமர்நாத் பனிலிங்கத்தை தவறவிட்டீர்களா? அப்படியானால் இங்கு வாருங்கள் என்று அழைக்கிறது சோலாங் பனிலிங்கம். சோலாங்கில் உருவாகியுள்ள இந்த 25 அடி உயர பனிலிங்கத்தை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இமாச்சலப்பிரதேசத்தில் இறுதிக்கட்ட சீசனை தவறவிடக்கூடாது என்பதற்காக வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அங்குள்ள சுற்றுலா பயணி தெரிவித்ததாவது, நிச்சயமாக இது எனது கனவு சுற்றுலா தலம். இங்கு வந்தது மிக உற்சாகமாக உள்ளது. உறையவைக்கும் குளிர் நிலவுவது அற்புதமாக உள்ளது. மேலும் பாராகிளைடிங் செல்ல காத்திருக்கிறேன். அது என் கனவு. முதல்முறை பாராகிளைடிங் செல்வது ஆனந்தமாக உள்ளது என தெரிவித்தார்.

மூலக்கதை