2 நாள் பயணமாக அகமதாபாத் வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு: 22 கி.மீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
2 நாள் பயணமாக அகமதாபாத் வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு: 22 கி.மீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்

அகமதாபாத்: 2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று காலை 11. 40 மணிக்கு அகமதாபாத்திற்கு வந்தார். விமானநிலையத்தில் பிரதமர் மோடி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

22 கி. மீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் மக்கள் உற்சாகமாக, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர். முன்னதாக, ஆக்ராவின் தாஜ்மஹால் டிக்கெட் கவுன்டர், டெல்லியின் மொகலாய தோட்டம் ஆகியன பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டன.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத் விமான நிலையத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் அவரது நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இன்று காலை 11. 40 மணிக்கு வந்தனர். அவரை பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.

அகமதாபாத் சர்வேதேச விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு டிரம்ப் சென்றார். சபர்மதி ஆசிரமத்தில் சோலா பகவத் பள்ளி மாணவர்கள் இந்திய மற்றும் அமெரிக்க தேசியக் கொடிகளுடன் நீண்ட வரிசையில் உற்சாகமாக வரவேற்றனர்.

அங்கு பல்வேறு கண்காட்சிகளை பார்வையிட்டார். காந்தி குறித்த ஆவணங்களையும் பார்வையிட்டு குறிப்புகளை எழுதினார்.



டிரம்ப் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மோடேரா ஸ்டேடியம் சென்றார். விமான நிலையத்திலிருந்து ஸ்டேடியம் வரையிலான 22 கி. மீ தொலைவை, பிரதமர் மோடியுடன் இணைந்து சாலை மார்க்கமாக, டிரம்ப் கடந்து சென்றார்.

சாலையின் இரு பகுதியிலும் பல ஆயிரம் மக்கள் கையசைத்து வரவேற்றனர். பல்வேறு நடன, பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடந்தன.

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியை போல், ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிகள் தொடங்கின.

பாலிவுட் பாடகர்கள் கைலாஷ் கெர் மற்றும் பார்த்திவ் கோஹில், குஜராத்தி நாட்டுப்புற பாடகர்களான கீர்த்திதன் காத்வி, கீதா ரபாரி, புருஷோத்தம் உபாத்யாய் மற்றும் சைராம் டேவ் ஆகியோர் அரங்கத்தில் நிகழ்ச்சிகளை நடத்தினர். அலகாபாத் ஸ்டேடியத்திற்கு வெளியே மொத்தம் 16 இடங்களில் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 3 ஊழியர்களை மாநகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது. சபர்மதி ஆசிரமத்திற்கு வெளியே பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டு இருந்தன.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்து வந்த மோப்ப நாய், அப்பகுதியில் மோப்பமிட்டவாறு சென்றது. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் டிரம்பை வரவேற்பதற்கு முன்னதாக ‘கர்பா’ நடனக் குழுவினர் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை நடத்தினர்.



‘நமஸ்தே டிரம்ப்’ ஸ்டேடியத்திற்கு வெளியே குதிரையில் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அதிபர் டிரம்ப் நேற்று இரவு இந்தியாவுக்குப் புறப்பட்டபோது பகிர்ந்த வீடியோவை பிரதமர் மோடி, இன்று காலை 8. 45 மணிக்கு ரீட்வீட் செய்து, “உங்கள் வருகைக்காக இந்தியா காத்திருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று காலை 10. 25 மணியளவில் முதல் முறையாக ஹிந்தி மொழியில் ட்வீட் செய்துள்ளார். அதில், “நாங்கள் இந்தியாவுக்கு வருவதை எதிர்நோக்குகிறோம்.

நாங்கள் வந்து கொண்டிருக்றோம்; சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திப்போம்” என்று பதிவிட்டிருந்தார். அகமதாபாத் விமான நிலையம் முதல் ஸ்டேடியம் வரை சாலையில் பாதுகாப்புக்காக குஜராத் காவல்துறையின் சேட்டக் கமாண்டோ மற்றும் விரைவு அதிரடிப்படை (ஆர்ஏஎப்)  வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கான பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஸ்டேடியத்தின் நுழைவு வாயிலில் காத்திருந்தனர். காலை 9. 20 மணியளவில் மைதானத்திற்கு வெளியே பெரும் கூட்டம் திரண்டிருந்தது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை குஜராத் கிரிக்கெட் சங்கம் செய்திருந்தது. மதியம் 1 மணிக்கு மோடேரா கிரிக்கெட் ஸ்டேடிய நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஆக்ரா செல்லும் டிரம்ப், இன்று மாலையில் தாஜ்மகாலை பார்வையிடுகிறார்.



மாலை 5. 15 மணியளவில் அதிபர் டிரம்ப், தாஜ்மஹால் வரவுள்ளதால் அங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1 மணி நேரம் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு இருப்பர். ஆக்ராவில் உள்ள சுற்றுலா அலுவலகங்களை தொடர்பு கொண்டு, எப்போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்? என்று ஊழியர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.

இதனையடுத்து தாஜ்மகாலில் பொதுமக்கள் பார்வைக்காக செயல்பட்டு வரும் டிக்கெட் கவுண்டர்கள் முற்பகல் 11. 30 மணியளவில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தாஜ்மகாலை பார்வையிட்ட பிறகு டிரம்ப் டில்லி செல்கிறார்.

அங்கு இந்திய அமெரிக்க நாடுகளுக்கிடையே வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளன. பின்னர் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஜனாதிபதி மாளிகையில் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப் வருகையையொட்டி டெல்லியில் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாதுகாப்பு காரணங்களால், இன்று மாலை டெல்லி கன்டோன்மென்ட், டெல்லி-குர்கான் சாலை (என். எச் 48), தவுலா குவான், சாணக்யபுரி, எஸ். பி.

மார்க், ஆர். எம். எல் ரவுண்டானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து பகுதிகள் போக்கு பாதிப்பு இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் ‘முகலாய தோட்டங்கள்’ எனக்கூறப்படும் சுற்றுலா தலம் இரண்டு நாட்கள் மூடப்படும்.

ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பராமரிப்பு நாள் என்பதால் பிப். 24ம் தேதி முகலாய தோட்டங்கள் பொது பார்வையாளர்களுக்கு திறக்கப்படாது’ என்று தெரிவித்துள்ளது.

சிவசேனா சீண்டல்

ட்ரம்பின் இந்தியா பயணத்தை எதிர்க்கும் சிவசேனா, இந்தியாவில் அமெரிக்க அதிபரின் 36 மணி நேரம் தங்கியிருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க இந்தியர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியின் பத்திரிக்கையில், ‘டிரம்ப்பின் வருகையால் இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசமும் இருக்காது. பின்னர் அவரது சுற்றுப்பயணத்தை மக்கள் பாராட்டுகிறார்கள் அல்லது உற்சாகப்படுத்துகிறார்கள் என்கிற கேள்வி எங்கிருந்து எழும்? என்று கேள்வி எழுப்பி அந்த பத்திரிகையில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

எங்களுக்கு ஆட்சேபணை இல்லை

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு, அமெரிக்க அதிபரின் மனைவி மெலனியாவுடன் நாளை நடைபெறவிருந்த டெல்லி அரசுப் பள்ளியின் பார்வையிடல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை.

பட்டியலில் இருந்து இருவர் பெயரும் நீக்கப்பட்டது. இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘மெலனியாவுடன் முதல்வர், துணை முதல்வர் வருவதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றாலும், இதனை ஒரு அரசியல் நிகழ்வாக பார்க்கக்கூடாது.

டிரம்பின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக மெலனியா, மாணவர்களுடன் உரையாடுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

.

மூலக்கதை