10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து: டெஸ்ட் சாம்பியன் இந்தியாவுக்கு முதல் தோல்வி.....பிப். 29ம் தேதி க்ரை சர்ச்சில் 2வது போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து: டெஸ்ட் சாம்பியன் இந்தியாவுக்கு முதல் தோல்வி.....பிப். 29ம் தேதி க்ரை சர்ச்சில் 2வது போட்டி

வெலிங்டன்: வெலிங்டனில் நடந்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 165 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து 3வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 100. 2 ஓவர்களில் 348 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அடுத்து 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்சை விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் களம் இறங்கி மந்தமாக விளையாடிய நிலையில், ஒரு கட்டத்தில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 78 ரன்களுடன் இருந்தது. இடைவேளைக்கு முந்தைய பந்தில் புஜாரா (11 ரன், 81 பந்து) அவுட் ஆக, சிக்கல் உருவானது.

அடுத்து கேப்டன் விராட் கோஹ்லி, மயங்க் அகர்வாலுடன் இணைந்தார். அணியின் ஸ்கோர் 96 ரன்களாக உயர்ந்த போது மயங்க் அகர்வால் (58 ரன், 99 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.



அடுத்து துணை கேப்டன் அஜிங்யா ரஹானே நுழைந்தார். நியூசிலாந்து பயணத்தில் ஜொலிக்காத கோலிக்கு இந்த இன்னிங்சும் ஏமாற்றத்திலேயே முடிந்தது.

பவுல்ட், ஷாட்பிட்சாக வீசிய பந்து எகிறி வந்தததை ‘புல்ஷாட்’டாக கோஹ்லி அடிக்க முனைந்த போது, பந்து பேட்டில் லேசாக உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச்சாக சிக்கியது. கோஹ்லி 19 ரன்களில் (43 பந்து, 3 பவுண்டரி)  வீழ்ந்தார்.

இதனால் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 113 ரன்களுடன் சிக்கலான சூழலை எதிர்கொண்டது. அடுத்ததாக ரஹானேவுடன், ஹனுமா விஹாரியும் விளையாடி தொடர்ச்சியாக 5 ஓவர்களை மெய்டனாக்கி ரஹானே 29 ரன்களும், விஹாரி 15 ரன்களும், ஆர். அஸ்வின் 4 ரன்களும், இஷாந்த் சர்மா 12 ரன்களும், ரிஷாப் பண்ட் 25 ரன்களும், பும்ரா (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.



முடிவில் முகமது சமி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 81 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்களான டாம் லாதம் 7 ரன்னும், டாம் பிளண்டெல் 2 ரன்னும் எடுத்து அணியை எளிதில் வெற்றிபெறச் செய்தனர். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

ஆட்ட நாயகன் விருது சவுத்தீக்கு வழங்கப்பட்டது. டெஸ்ட் சாம்பியன் போட்டியில் இந்திய அணி அடைந்த முதல் தோல்வி இது.

8  போட்டிகளில் 7ல் வென்றுள்ள இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில்  நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் 2வது இடம் வகிக்கிறது.

இந்த  வெற்றியின் மூலம் 120 புள்ளிகளுடன் நியூசிலாந்து 5வது இடம் பிடித்தது. நியூசிலாந்துக்கு 100வது டெஸ்ட் போட்டியின் வெற்றி.

அடுத்ததாக 2வது டெஸ்ட் பிப்.

29 முதல் க்ரைசர்ச்சில் தொடங்குகிறது.

.

மூலக்கதை