மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் கட்டடம் கட்ட பரிசீலனை

தினமலர்  தினமலர்
மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் கட்டடம் கட்ட பரிசீலனை

மதுரை : மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நெருக்கடியை தவிர்க்க 30 நீதிமன்ற ஹால்களுடன் ஐந்து தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்ட பரிசீலனை நடக்கிறது. இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்க பொதுப்பணித்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது மாவட்ட நீதிமன்றத்தில் 30க்கும் மேற்பட்ட குற்றவியல் நடுவர், சார்பு, மாவட்ட, சிறப்பு அமர்வு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. தினமும் இங்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள், அவர்களது வாகனங்களால் நீதிமன்ற வளாகத்தில் நெரிசல் நிலவுகிறது. இதை தவிர்க்க கூடுதல் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12 நீதிமன்ற ஹால்களுடன் இரு தளங்கள் கொண்ட கட்டடம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு ரூ.30 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 30 நீதிமன்ற ஹால்களுடன் ஐந்து தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்ட உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்க பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 8 ஏக்கர் நிலம் இருக்கிறது. இங்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும். இதற்காக ரூ.75 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. விரைவில் உயர்நீதிமன்றம் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். உயர்நீதிமன்றம் ஒப்புதலுக்கு பின் அரசுக்கு அனுப்பப்படும். அரசு நிதி ஒதுக்கியதும் கட்டுமான பணி துவங்கும், என்றார்.

மூலக்கதை