நாளை மறுநாள் டிரம்புடன் இரவு விருந்து: சோனியா, ராகுலுக்கு அழைப்பில்லை...தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அழைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை மறுநாள் டிரம்புடன் இரவு விருந்து: சோனியா, ராகுலுக்கு அழைப்பில்லை...தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அழைப்பு

புதுடெல்லி: டெல்லியில் நாளை மறுநாள் டிரம்புடன் இரவு விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுலுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

தமிழக முதல்வர் எடப்பாடி உட்பட மாநில முதல்வர்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் சுற்றுபயணமாக இந்தியா வருகிறார். நாளை அகமதாபாத்திலும் நாளை மறுநாள் டெல்லி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

நாளை மறுநாள் (பிப். 25) ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இரவு உணவு விருந்து அளிக்கிறார்.

இதற்காக, 95 மிக முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர்களில், இரண்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

வழக்கமாக வெளிநாட்டு தலைவர்கள் இந்திய வரும்போது, எதிர்க்கட்சி தலைவர்களை அழைப்பது வழக்கம்.

ஆனால், இந்த முறை எவ்வித அழைப்பும் காங்கிரஸ் தலைவருக்கு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஜனாதிபதி அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ள, ஜனாதிபதி அலுவலகம் மூலம் அழைக்கப்பட்டவர்களின் பட்டியலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவரை போன்றே, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் ஐதராபாத்திற்கு வந்திருந்தார்.

அப்போது தெலங்கானா அரசின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை