குடும்பத்தினருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருகை: ஹெலிகாப்டரில் அமெரிக்க அதிகாரிகள் ரோந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடும்பத்தினருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருகை: ஹெலிகாப்டரில் அமெரிக்க அதிகாரிகள் ரோந்து

அகமதாபாத்: குடும்பத்தினருடன் இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை அகமதாபாத் வருகை தருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக 22 கி. மீ தூர வரவேற்பு நிகழ்ச்சி 7 கி. மீ.

தூரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் அமெரிக்க அதிகாரிகள் ரோந்து செல்வதால் குஜராத் முழுவதும் பரபரப்பாக உள்ளது.

நாளை பிற்பகல் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், அவரது மகள் இவான்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் குழுவினர் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இந்திரா பாலம் மற்றும் கோட்டேஷ்வர் கோயில் வழியாக மோட்டேரா கிரிக்கர் மைதானம் செல்கின்றனர்.

இவர்களை வரவேற்பதற்காக சாலையோரம் இந்திய பாரம்பரிய கலாசாரத்தை சித்தரிக்கும் 28 நிலைகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை அகமதாபாத் மாநகராட்சி (ஏஎம்சி) அதிகாரிகள் செய்துள்ளனர். சபர்மதி காந்தி ஆசிரமம் டிரம்ப் செல்லும் வகையிலான திட்டத்தின்படி, சுமார் 22 கி. மீ.

சாலையோர வரவேற்பு திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடக்கும் மோட்டேரா மைதானம் வரை சுமார் 7 கி. மீ தூரம்தான். அதனால், பாதுகாப்பு காரணங்களால் காந்தி ஆசிரம பயண திட்டம் ரத்தாக வாய்ப்புள்ளது.

நேற்று பிற்பகல் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மோட்டேரா மைதானத்தின் மீது பறந்து கொண்டிருந்தன.


அதில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அமர்ந்திருந்து, பாதையின் வான்வழி படங்களை எடுத்துக்கொண்டனர்.

பின்னர், எஸ்ஆர்பி மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுடன் ஏழு காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய மோட்டேரா மைதானத்தை அதிபர் டிரம்ப் திறந்து வைக்கவுள்ளார்.

‘நமஸ்தே டிரம்ப்’ என்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக அகமதாபாத் விமான நிலையம் வந்திறங்கும் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு விமான நிலையத்தில் ‘சங்க்நாத்’ எனப்படும் சங்க நாதம் இசைத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது.

 பிரம்மநாதம் என்று அழைக்கப்படும் இந்த ஒலி பிரபஞ்சத்தில் காணப்படும் அதிர்வுகள் மற்றும் ஆற்றல்களையும் நேர்மறை எண்ணங்களையும் உள்ளிளுக்கும் என நம்பப்படுகிறது.

தொடர்ந்து 150 அடி நீள சிவப்புக் கம்பளத்தில் நடந்து வரும் டிரம்ப் தம்பதியை வரவேற்க நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. அதிபர் டிரம்ப், அகமதாபாத் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள உலக அதிசயமான தாஜ்மகாலுக்கு தனது மனைவி, மகள், மருமகனுடன் சென்று சுற்றிப் பார்க்கவுள்ளார்.

ஆக்ராவில் சாலையோர மின் கம்பங்களில், தேசிய கொடி நிறத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தாஜ்மஹால் செல்லும் சாலையில், முகலாய கோபுரங்களை குறிக்கும் வடிவத்தில், பொன்னிற ஒளியூட்டம் கண்களை ஈர்த்துள்ளன.



சாலையில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யும் ஊழியர்கள், தடுப்புக் கம்பிகள் மீது புதிய வண்ணம் பூசி வருகின்றனர். அதன்பின், நாளை மறுநாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு, பிரதமர் மோடியுடனான ஆலோசனை, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கவுள்ளன.

அதன்பின், 2 நாள் இந்திய பயணத் திட்டத்தை முடித்துக்கு கொண்டு டிரம்ப் குழுவினர் வாஷிங்டன் புறப்பட்டு செல்கின்றனர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்குப் பிறகு, டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு முதன்முறையாக விஜயம் செய்கிறார்.

இந்த பயணத்தின் போது இந்தோ - பசிபிக் விவகாரம், குறைக்கப்பட்ட வர்த்தக தடைகள், பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல் மற்றும் எச் -1 பி விசாக்கள், சிஏஏ உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியா தரப்பில் டிரம்புடன் பேசப்படும் என்று வெளியுறவு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்திக்கு ராஜ் காட்டில் மரியாதை

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் பல உலகத் தலைவர்கள் சபர்மதியில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.   1960ம் ஆண்டுவாக்கில் பிரிட்டிஷ் ராணி எலிசபெத் உட்பட பலர் சென்று வந்தனர்.

மோடி பிரதமரான பின்னர், 2014 செப்டம்பரில், சீன அதிபர் ஜி ஜின்பிங். செப்டம்பர் 2017ல் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அவரது மனைவி அகி, 2018 ஜனவரியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோரும் ஆசிரமத்திற்கு சென்று வந்தனர்.

 நாளை அகமதாபாத் வரும் டிரம்ப், காந்தி ஆசிரமம் செல்லவில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.

அதனால், டிரம்பின் குடும்பத்தினர் டெல்லியில் ராஜ் காட் என்ற இடத்தில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் தேசத்தின் தந்தைக்கு மரியாதை செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகுபலி வீடியோவால் சர்ச்சை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வருகையையொட்டி, தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தை மார்பிங் செய்து அதன் வீடியோ டிவிட்டரில் பிரபலமாகி வருகிறது.    அந்த வீடியோவில் பிரபாஸ் முகத்துக்குப் பதிலாக டிரம்ப் முகம் இணைக்கப்பட்டுள்ளது.    இந்த வீடியோவில் டிரம்ப் மனைவி, மகள் மற்றும் மகன் முகமும் உள்ளது.

இந்நிலையில், ‘சோல்’ என்ற பெயரில் வெளியான அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் டிரம்ப் இன்று அதிகாலை பகிர்ந்து, ‘இந்தியாவில் உள்ள எனது நெருங்கிய நண்பர்களை காண ஆவலாக உள்ளேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த பாகுபலி வீடியோவில் மோடி மற்றும் அவர் மனைவியின் முகங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

அவர் மோடியின் மனைவி என்பது தெரியாமலே டிரம்ப் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மோடியின் மனைவி அவருடன் சேர்ந்து வாழவில்லை என்பதும், எந்த ஒரு நிகழ்விலும் இருவரும் சேர்ந்து கலந்துக் கொள்வதும் கிடையாது.

இருந்தும், இந்த வீடியோவில் ேமாடியின் மனைவியுடனான 81 வினாடி வீடியோவை ஏன் டிரம்ப் வௌியிட்டார் என்பது சர்ச்சையாகி உள்ளது.

.

மூலக்கதை