கோவை, நாமக்கல், புதுகையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோவை, நாமக்கல், புதுகையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

சென்னை: கோவை, நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் கோவை செட்டிபாளையம் எல்என்டி பைபாஸ் ரோடு பகுதியில் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

இதை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி, கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்க தலைவர் எஸ். பி. அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டில் அமைச்சர் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரின் காளைகள் உட்பட மதுரை, அலங்காநல்லூர், தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 900 காளைகள் பங்கேற்றன. 820 காளையர்கள் களமிறங்கினர்.

போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக மாருதி ஆல்டோ கார், இரண்டாம் பரிசாக மோட்டார் பைக், மூன்றாம் பரிசு ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. சிறந்த காளையை வளர்த்தவருக்கு நாட்டு மாடு சிறப்பு பரிசாக வழங்கப்பட உள்ளது.



நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. அதன் பிறகு இன்றுதான் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

போட்டியை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பங்கேற்று கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர். இதில் திருச்சி, மதுரை, தம்மம்பட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றுள்ளன.

இதேபோல் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு,  வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்து வரும் காளைகளை அடக்கினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி கவிநாடு கண்மாயில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.

புதுக்கோட்டை மட்டுமின்றி திருச்சி, கரூர், மதுரை, தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் இருந்து சுமார் 900 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. 450 வீரர்கள் களமிறங்கினர்.

காலை 9. 30 மணியளவில் அமைச்சர் விஜயபாஸ்கர்  ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார்.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியில் காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

இதேபோல் பொன்னமராவதி இடையாத்தூர் கிராமத்தில் அய்யனார் கோயில் சிவராத்திரி விழாவையொட்டி இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.



.

மூலக்கதை