ஈஷாவில் மகா சிவராத்திரி விழா துணை ஜனாதிபதி பங்கேற்றார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஈஷாவில் மகா சிவராத்திரி விழா துணை ஜனாதிபதி பங்கேற்றார்

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கோவை ஈஷா யோகா மையத்தில் 26ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா அங்குள்ள ஆதியோகி சிலை முன் பஞ்ச பூத ஆராதனையுடன் நடந்தது.

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தலைமை தாங்கினார். இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குத்துவிளக்கு ஏற்றி, இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதையொட்டி, லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை நடத்தப்பட்டது.

‘மரணம்’ தொடர்பாக சத்குரு எழுதிய ‘டெத்’ என்ற பெயரிலான புதிய ஆங்கில புத்தகத்தை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். முன்னதாக, துணை ஜனாதிபதி, ஈஷா யோகா மையத்தில் உள்ள சூர்ய குண்டம், நாகா சன்னதி, லிங்க பைரவி, தியானலிங்கம் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

சிவராத்திரி நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: நாம் மொழி, ஆடைகள், கடவுளை வழிபடும் முறைகள் என பல வகைகளில் வேறுபட்டு இருந்தாலும் சாதி, மத, இனங்களை கடந்து இந்தியர் என்ற உணர்வால் ஒன்றாக உள்ளோம்.

உலகமே ஒரு குடும்பம் என பார்க்கும் ஒரே கலாச்சாரம் நம் இந்திய கலாச்சாரம் தான்.

மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் மூலம் இந்த கலாச்சாரத்தைக் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இமாச்சல பிரேதச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய ஜல சக்தி துறை அமைச்சர் கஜந்திர சிங் ஷகாவத், மத்திய அமைச்சர் அஸ்வினி குமார், தமிழக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இரவு முழுவதும் தொடர்ந்த நிகழ்ச்சி சத்குரு ஜகி வாசுதேவ் நிறைவு உரையுடன் முடிவடைந்தது.

.

மூலக்கதை