விழிப்புணர்வு! பாரம்பரிய கட்டடங்கள் குறித்து ... சிந்தாதிரிப்பேட்டையில் ஹெரிடேஜ் வாக்

தினமலர்  தினமலர்
விழிப்புணர்வு! பாரம்பரிய கட்டடங்கள் குறித்து ... சிந்தாதிரிப்பேட்டையில் ஹெரிடேஜ் வாக்

சென்னை : சென்னையின் பாரம்பரிய கட்டடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 'மெட்ராஸ் இன்ஹெரிட்டட்' என்ற அமைப்பு சார்பில், 'சிந்தாதிரிப்பேட்டை ஹெரிடேஜ் வாக்' நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

'டிரிபிள் ஓ ஸ்டுடியோ' என்ற கட்டடக்கலை நிறுவனத்தின் ஒரு கிளையான, மெட்ராஸ் இன்ஹெரிட்டட் என்ற அமைப்பு, பாரம்பரிய மேலாண்மை, கலாசார பாரம்பரிய சுற்றுலா, பாரம்பரிய கல்வி மற்றும்விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.மெட்ராஸ் இன்ஹெரிட்டட், நகரத்தில் மறைந்து வரும் பாரம்பரியத்தை, மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறது. தொடர்ச்சியாக, நேற்று காலை, சிந்தாதிரிப்பேட்டை ஹெரிடேஜ் வாக் என்ற தலைப்பில், நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில், சிந்தாதிரிப்பேட்டையின் பாரம்பரியம் குறித்து, அங்கு வசிக்கும் மக்கள் மூலம் விளக்கப்பட்டது.

அதன் வரலாறு குறித்தும், மெட்ராஸ் இன்ஹெரிட்டட் அமைப்பின் ஆராய்ச்சி உதவியாளர் அஷ்மிதா, 24, பொதுமக்களுக்கு விளக்கினார்.சிந்தாதிரிப்பேட்டை, ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இருந்து, 'ஹெரிடேஜ் வாக்' துவங்கப்பட்டது. சென்னையில், நெசவு தொழில் செய்ய, ஆங்கிலேய கவர்னர் ஜார்ஜ் மோர்டன் என்பவரால், சின்ன தாரி பேட்டை உருவாக்கப்பட்டது.இந்த கிராமத்தை உருவாக்க, சுங்கு ராம செட்டியார் என்பவரிடம் இருந்து நிலம் எடுக்கப்பட்டது. அங்குள்ளவர்களுக்கான வீடுகள் மற்றும் ஆதிபுரீஸ்வரர் கோவிலையும், ஆடியப்பா நாராயண செட்டி என்பவர் கட்டினார்.அதன் பின், மங்காபதி தெருவில், கல்யாணசுந்தரம் செட்டியார் வீடு குறித்து விளக்கப்பட்டது.

ஐயா முதலி தெருவில், 300 ஆண்டுகளுக்கு முன், சவுராஷ்டிரா சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்கள், பரம்பரை தொழிலான கோவில் குடை செய்து வருகின்றனர். இங்கிருந்து, திருப்பதி கோவிலுக்கும், சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளுக்கும், அவை ஏற்றுமதிசெய்யப்படுகின்றன.இதையடுத்து, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வரலாறு குறித்து விளக்கினர்.பின், அருணாச்சல தெருவில், 1836ல், அமெரிக்கர்கள் கட்டிய சீயோன் சர்ச்சின் குறித்தும், தி கோசென் நுாலகம் குறித்தும் விளக்கப்பட்டது. கோசென் நுாலகத்தில், 50 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ் புத்தகங்கள். இந்த நுாலக கட்டடம் பழுதடைந்துள்ளது.

மே தின பூங்காவில் சென்று, 'ஹெரிடேஜ் வாக்' முடிவடைந்தது. இந்த பூங்காவில், பெரியார், சிங்காரவேலர் ஆகியோர் அரசியல் கூட்டங்கள் நடத்தி உள்ளனர்.மெட்ராஸ் இன்ஹெரிட்டட் அமைப்பின் ஆராய்ச்சி உதவியாளர் அஷ்மிதா, 24, கூறியதாவது:நாம் வாழும் இடத்தில், நம்மை சுற்றியுள்ள அரிய பொக்கிஷங்கள் குறித்து, எந்த தகவலும் அறியாமல் உள்ளோம். இது குறித்து, மக்களுக்கு விளக்குவதால், பாரம்பரிய கட்டடங்களை அழியாமல் காப்பாற்ற முடியும் என, நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை