தண்ணீர் 'அரசியல்' ! குழாயில் காத்து தான் வருது: செயற்கை தட்டுப்பாடு காரணமா!

தினமலர்  தினமலர்
தண்ணீர் அரசியல் ! குழாயில் காத்து தான் வருது: செயற்கை தட்டுப்பாடு காரணமா!

அவிநாசி;கோடை துவங்கும் முன்பே, திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பத்து, பதினைந்து நாளுக்கு ஒருமுறையே வினியோகிக்கப்படுவதற்கு, பகிர்மானம் சரியாக இல்லாததும், செயற்கைத் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டுள்ளதும் காரணங்களாக கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையம், பவானி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து, இரண்டு மற்றும் மூன்றாம் குடிநீர் திட்டங்களின், கீழ், அன்னுார், அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் மற்றும் வழியோர கிராமங்களுக்கு, குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், தண்ணீர் வழங்கப்படுகிறது.திறந்து விடப்படும் தண்ணீர், உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், ஆங்காங்கு கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
ஊராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிக்கு, தினசரி, வினியோகிக்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவு, வரையறை செய்யப்பட்டிருக்கிறது.ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 40- முதல் 50 சதவீதம் வரை மட்டுமே, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
இதற்கு, வழிநெடுகிலும் உள்ள குழாயில், அவ்வப்போது ஏற்படும் உடைப்பு, நீரேற்று நிலையத்தில் ஏற்படும் பழுது, மின் தடை என பல காரணங்களை குடிநீர் வடிகால் வாரியத்தினர் அடுக்குகின்றனர்.அவிநாசி பேரூராட்சியில், இம்மாதம் இதுவரை, ஆறு நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கோடை துவங்க உள்ள நிலையில், தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற முடியாத சூழ்நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன.
10 - -15 நாள் இடைவெளியில் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய நிலை, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.புதிய சிக்கல் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து, ஊராட்சிகளில் புதிய தலைவர்கள், உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். பெரும்பாலான ஊராட்சிகளில் தண்ணீர் வினியோகம் சீராக இல்லாத நிலையில், 'நாங்கள் வெற்றி பெற்றால், தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண்போம்' என்ற வாக்குறுதியை முன்வைத்தே, பலர் வெற்றி பெற்றுள்ளனர்.'கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற, தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, குடிநீர் வடிகால் வாரியத்தினரால் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை, தங்கள் கிராமத்துக்கு கூடுதலாக திருப்பி கொள்கின்றனர்; கூடுதலாக தண்ணீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நிர்ப்பந்திக்கின்றனர்' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், பிற கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன.கவனிக்குமாமாவட்ட நிர்வாகம்!தண்ணீர் வினியோகத்தில் சரியான நடைமுறை பின்பற்றப்படாததால், கோடை துவங்குவதற்கு முன்பே, பல இடங்களில் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது.கடந்தாண்டு, பருவமழை கை கொடுத்த நிலையில் தண்ணீருக்கான போராட்டம் பல இடங்களில் ஏற்படவில்லை.
இம்முறை, கோடைக்கு முன்பே தண்ணீர் தட்டுப்பாடு தலைதுாக்க துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகை என பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை காண்பிக்க துவங்கியிருக்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், இவ்விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, தண்ணீர் வினியோகத்தை முறைப்படுத்தாவிட்டால் கோடையில் ஏற்படும் பிரச்னையை சமாளிப்பது கடினம்.

மூலக்கதை