விதி மீறும் அரசு பஸ்களும் தப்ப முடியாது! அபராதம் செலுத்தணும்!

தினமலர்  தினமலர்
விதி மீறும் அரசு பஸ்களும் தப்ப முடியாது! அபராதம் செலுத்தணும்!

கோவை:போக்குவரத்து விதிகளை மீறும் அரசு பஸ்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை; தனியார் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று புகார் எழுந்துள்ள நிலையில், அரசு பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று, போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு தெரிவித்தார்.
'ஒரு தேசம்; ஒரு சலான்' திட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிமீறல்களை பதிவு செய்ய, கோவை மாநகர போலீசாருக்கு, இ--சலான் கருவிகள் வழங்கப்பட்டன.இத்திட்டம் வாயிலாக, அபராதத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.ஆனால், தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே இந்த நிலை இருப்பதாகவும், விதிகளை மீறும் அரசு பஸ்களுக்கு, அபராதம் விதிப்பதில்லை என்றும், குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மீறும் அரசு பஸ்கள் மீதும், அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில், ''கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த அபராதம், வாகனத்தின் ஆர்.சி., யுடன் இணைக்கப்படும். வாகன தகுதிச்சான்று புதுப்பிக்கும்போது, இந்த அபராதத்தை செலுத்தினால், மட்டுமே புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ள முடியும். அபராத நடவடிக்கை, தானியங்கி முறையில் நடக்கிறது. இந்த விதிமுறை, அரசு பஸ்களுக்கும் பொருந்தும். கடந்த ஓராண்டில், 200க்கும் மேற்பட்ட அரசு பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

மூலக்கதை