பசுமையான மரங்களை அகற்றி கட்டடம்: அரசு கைவிட கிராம மக்கள் வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
பசுமையான மரங்களை அகற்றி கட்டடம்: அரசு கைவிட கிராம மக்கள் வலியுறுத்தல்

உடுமலை:உடுமலை அருகே, பசுமையான மரங்களை வெட்டி அகற்றி, கட்டடம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், பெதப்பம்பட்டியில், கால்நடைத்துறையின் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கடந்த, 1965ம் ஆண்டு, அப்பகுதியை சேர்ந்தவர்களால், நான்கு ஏக்கர் நிலம் தானமாக அளிக்கப்பட்டு, இம்மருந்தகம் துவக்கப்பட்டது. தற்போது, மருந்தகக்கட்டடம் மற்றும் பயன்பாட்டில் இல்லாத அலுவலர் கட்டடம் தவிர்த்து, பிற பகுதியில், பல்வேறு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சோமவாரப்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், கால்நடை மருந்தக வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டன; கடந்த சில ஆண்டுகளாக தொடர் பராமரிப்பு காரணமாக, மரக்கன்றுகள் செழித்து வளர்ந்துள்ளன. இந்நிலையில், சுகாதாரத்துறை சார்பில், வளாகத்தில், புதிய கட்டடம் கட்ட, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, கட்டடம் கட்ட, இடத்தை கையகப்படுத்தினால், அங்குள்ள, 30க்கும் அதிகமான மரங்களை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். இது குறித்து அப்பகுதி மக்கள் திருப்பூர் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர். மனுவில், 'சோமவாரபட்டி ஊராட்சியில் பசுமை பூங்கா போல, கால்நடை மருந்தக வளாகம் மாறியுள்ளது. செழித்து வளர்ந்துள்ள மரங்களை தொடர்ந்து பராமரித்தால் சிறிய வனம் போல அப்பகுதி மாறி விடும்; சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, சுகாதாரத்துறை சார்பில் புதிய கட்டடம் கட்ட மாற்று இடத்தை தேர்வு செய்து, மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்க வேண்டும்.மாவட்டத்தில், பசுமையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும், மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும்,' இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை