ஷாகீன்பாக்கை தொடர்ந்து ஜப்ராபாத்தில் பதற்றம் தலைநகர் டெல்லியில் வன்முறை, தீவைப்பு

தினகரன்  தினகரன்
ஷாகீன்பாக்கை தொடர்ந்து ஜப்ராபாத்தில் பதற்றம் தலைநகர் டெல்லியில் வன்முறை, தீவைப்பு

* போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு * இரவில் பெண்கள் திடீர் சாலை மறியல்புதுடெல்லி: தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் நடந்த போராட்டத்தால் பதற்றம் நிலவுகிறது. தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஷாகீன்பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் பொது மக்களுக்கு இடையூறாக சாலையை மறித்துள்ளதால்,  மாற்று இடத்திற்கு சென்று போராட்டத்தை தொடர உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்காக போராட்டக்காரர்களுடன் பேச சமரசக்குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டனர்.ஆனால், இந்தகுழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில்  முடிந்தது. இதனால் போராட்டம் அங்கு தொடர்ந்து வருகிறது.இந்நிலையில், ஷாகீன்பாக்கை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களுக்கு திடீரென போராட்டம் பரவ தொடங்கியுள்ளது. வடகிழக்கு டெல்லியின் சீலாம்பூர், மவுஜ்பூர் பகுதிகளை யமுனா விகாருடன் இணைக்கும் சாலையில் 1000க்கும் அதிகமான  பெண்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் சனிக்கிழமை இரவு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் இடம் அருகே உள்ள மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும், அதனை ஆதரிப்பவர்களுக்கும் இடையே திடீர் மோதல் வெடித்தது. குறிப்பாக, உள்ளூரை சேர்ந்த பாஜ பிரமுகரும்  முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சருமான கபில் மிஸ்ரா, சிஏஏ சட்டத்தக்கு ஆதரவாக அதே பகுதியில் ஆதரவு பேரணிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து அங்கு ஏராளமானோர் கூடினர். அப்போது, நண்பகலில், கபில் மிஸ்ரா தலைமையிலான  சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மோதிக்கொண்டனர். இருதரப்பிலும் ஒருவர் மீது மற்றொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடம் போர்களம் போனறு காட்சியளித்தது. இதையடுத்து அங்கு  போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலவரம் ஏற்படுத்தியவர்களை துரத்தி அடித்தனர். ஆனாலும், சிஏஏ எதிர்ப்பாளர்கள் அந்த இடத்தை விட்டு நகராமல் தொடர்ந்து தஙகளது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால்  தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.ஜப்ராபாத் தவிர, சீலாம்பூர், மவுஜ்பூர் மற்றும் சாந்த் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் தற்போது போராட்டம் துவங்கியுள்ளது. இது மத்திய அரசுக்கு திருகுவலி ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிகிறது.மெட்ரோ நிலையம் மூடல்போராட்டம் திடீரென உருவெடுத்ததால், மெட்ரோ ஸ்டேஷனில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி அதனால் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் எனக் கருதிய மெட்ரோ நிர்வாகம், ஜப்ராபாத் மெட்ரோ ஸ்டேஷன் வாயில்களை இழுத்து  மூடியது. ஜப்ராபாத் ஸ்டேஷனில் ரயில் நிற்காது என அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மெட்ரோ நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால், மெட்ரோ பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, பஸ்சுக்காக இங்குமங்கும் அலைந்து திரிந்து அவதிப்பட்டனர்.அலிகாரிலும் பயங்கர மோதல்உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உபார்கோட் கோலிவாட் பகுதியில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அங்கிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று,  போராட்டக்காரர்கள் இருக்க வசதி கூடாரம் அமைத்துக் கொள்ள அனுமதி கேட்டனர். ஆனால், போலீசார் இதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் அங்கிருந்த போலீஸ் வாகனங்களை போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர். சில வாகனங்களை தீ  வைத்து கொளுத்தினர். இதனால் பல போலீசாரும் காயம் அடைந்தனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும், தொடர்ந்து வன்முறை பரவாமல் தடுக்க,  அலிகார் முழுவதும் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை