சிக்கலான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள்: அரசியல் சாசனத்தை பலப்படுத்துகிறது: ஜனாதிபதி ராம்நாத் பாராட்டு

தினகரன்  தினகரன்
சிக்கலான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள்: அரசியல் சாசனத்தை பலப்படுத்துகிறது: ஜனாதிபதி ராம்நாத் பாராட்டு

புதுடெல்லி: ‘சிக்கலான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள், நாட்டின் அரசியல் சாசனத்தையும், சட்ட கட்டமைப்புகளையும் பலப்படுத்தி வருகிறது,’ என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டியுள்ளார். டெல்லியில் ‘சர்வதேச நீதித்துறை மாநாடு - 2020’ நடைபெற்று வருகிறது. இதை நேற்று முன்தினம் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, பாலின சமநிலையை காப்பதில் நீதித்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக புகழ்ந்தார். 2ம் நாளான நேற்று, ‘நீதித்துறையும் மாறிவரும் உலகமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பேசியதாவது: பாலின நீதியை காப்பதில் இந்திய நீதித்துறை எப்போதும் போற்றத்தக்க, உன்னதமான குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. செயல் திறன் மிக்கதாகவும், முன்னேற்றத்தை உள்ளடக்கியதாகவும் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதற்கு உதாரணமாக, வேலை செய்யும் இடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலின தொல்லைகளை தடுப்பதற்காக 20 ஆண்டுகளுக்கு முன் விசாகா வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்தது முதல், இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அதிகார அந்தஸ்து வழங்கும்படி இந்த மாதம் உத்தரவிட்டது வரை, முன்னேற்றமிக்க சமூக மாற்றங்களை உச்ச நீதிமன்றம் முன்நடத்தி செல்கிறது.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை சாதாரண மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், நாட்டின் ஒன்பது முக்கிய மொழிகளில் அவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பன்மொழி தன்மையை மனதில் கொண்டு செய்யப்பட்ட அசாதாரணமான இந்த முயற்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் கடைகோடி குடிமகனுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் செய்யும் பல்வேறு நீதித்துறை சீர்த்திருந்தங்கள், மாற்றங்கள் பாராட்டுக்குரியது. இணக்கமான சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், நாட்டின் நிலையான வளர்ச்சியிலும் நீதித்துறை முக்கிய பங்காற்றுகிறது. இது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் நீதித்துறை பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இதன் மூலம், தகவல் பாதுகாப்பு மற்றும் தனிநபர் சுதந்திரம் பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. சிக்கலான வழக்குகளில் உச்ச நீதிமனறம் அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள், நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் சட்ட கட்டமைப்புகளை பலப்படுத்தி இருக்கின்றன. நீதித்துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘மாற்றுத் தீர்வு நடைமுறை’யின் மூலம், நீதித்துறையில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை