மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு நாட்டின் பல்லுயிர்த்தன்மை மனித சமுதாயத்தின் சொத்து: அவ்வையாரின் பழமொழியை மேற்கோள்காட்டி உரை

தினகரன்  தினகரன்
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு நாட்டின் பல்லுயிர்த்தன்மை மனித சமுதாயத்தின் சொத்து: அவ்வையாரின் பழமொழியை மேற்கோள்காட்டி உரை

புதுடெல்லி: ‘‘இந்தியாவின் பல்லுயிர்த்தன்மை ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கான சிறப்பான சொத்து’’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆண்டுதோறும் பல புலம்பெயர் பறவை இனங்களுக்கு இந்தியா புகலிடமாக விளங்குகிறது.  இப்படி வரும் 500க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பற்பல வகையானவை, பற்பல இடங்களிலிருந்து வருபவை எனத் தெரிவிக்கிறார்கள். தற்போது உயிரியலாளர்கள், ஒரு புதிய வகை மீன் இனத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், இது மேகாலயத்தின் குகைகளுக்குள்ளே மட்டுமே காணப்படுகிறது.  நிலத்துக்கு அடியில் குகைகளுக்கு உள்ளே வசிக்கும் நீர்வாழ் உயிரினங்களிலேயே மிகப் பெரியதாக இந்த மீன் கருதப்படுகிறது.ஒளி புகமுடியாத இடங்களிலும்கூட, இருள்நிறைந்த, ஆழமான நிலத்தடிக் குகைகளுக்கு உள்ளே இந்த மீன் வாழ்கிறது.  நமது நாடு, குறிப்பாக மேகாலயம் இத்தகைய அரியவகை இனத்துக்கான வாழ்விடமாக இருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். நாட்டின் உயிரினப் பன்முகத்தன்மைக்கான ஒரு புதிய பரிமாணமாகத் திகழ்கிறது.  நமக்கருகே இப்படிப்பட்ட அநேக அற்புதங்கள் இன்னமும்கூட கண்டுபிடிக்கப்படாதவையாக இருக்கின்றன.  இந்த அற்புதங்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு தணியாத ஆர்வம் அவசியமாகிறது.மகத்துவம் வாய்ந்த பெண்புலவரான ஔவையார் என்ன எழுதி இருக்கிறார் தெரியுமா? ‘கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு’. நமது நாட்டின் பன்முகத்தன்மை விஷயத்திலும் இதுதான் உண்மை, அதுபற்றி நாம் அறிந்திருப்பது மிகக் குறைவே.  நமது பல்லுயிர்த்தன்மையும் மனித சமுதாயம் முழுவதற்குமான ஒரு அற்புதமான சொத்து. இதை நாம் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும், மேலும் ஆய்வு செய்ய வேண்டும். இப்போதெல்லாம் நமது நாட்டின் குழந்தைகளிடம் அறிவியல்-தொழில்நுட்பத்தின் பால் ஆர்வம் தொடர்ந்து கூடி வருகிறது.  விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் சாதனைகள், புதிய திட்டங்கள் ஆகியன ஒவ்வொரு இந்தியருக்குமே பெருமிதம் அளிக்கக்கூடியவையாக இருக்கிறது. ஹரிகோட்டாவில்  பார்வையாளர் மாடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து 10,000 பேர் அமர்ந்து பார்க்க ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.   இனிவரும் காலத்தில் மாணவர்களை அங்கு அழைத்து சென்று பயனடைய வேண்டும் என்று நான் அனைத்துப் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.இஸ்ரோவின் யுவிகா திட்டம், இளைஞர்களை அறிவியலோடு இணைப்பதற்காக கொண்டு வரப்பட்ட பாராட்டுதற்குரிய முன்னெடுப்பு. 2019ஆம் ஆண்டு இந்தத் திட்டம் பள்ளிக் குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. நீங்களும் இதில் கலந்து கொள்ள விரும்பினால், www.yuvika.isro.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். கடந்த ஜனவரி 31ம் தேதியன்று லடாக்கின் அழகான பள்ளத்தாக்குகள், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவத்துக்கு சான்றாக விளங்கியது. லே பகுதியின் குஷோக் பாகுலா ரிம்போசீ விமானநிலையத்திலிருந்து, இந்திய விமானப்படையின் ஏன்-32 ரக விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து வரலாறு படைத்தன.  இந்தப் பயணத்தில் 10 சதவீதம் உயிரி எரிபொருள் கலவை பயன்படுத்தப்பட்டது.  இந்த மகத்தான சாதனையில் விமான எரிபொருள் இறக்குமதி குறையும்.இப்போது பழைய அணுகுமுறையோடு பயணிக்க விரும்பவில்லை. குறிப்பாக புதிய இந்தியாவில் நமது சகோதரிகளும் அன்னையர்களும் முன்னே கால் பதித்து, சவால்களைத் தாங்களே கையாள்கிறார்கள். இதற்கு நல்ல உதாரணம், பீகாரின் பூர்ணியா பகுதி. இங்குள்ள பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் அமைத்துக் கொண்டு மல்பரி பட்டுக்கூடு தயாரித்து, புடவைகள் நெசவு மற்றும் விற்பனை மூலம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள். காம்யா என்ற 12 வயதுப் பெண், அகான்காகுவா மலையுச்சிக்குப் பயணித்து சாதனை படைத்திருக்கிறாள். இதேபோல், கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த 105 வயது நிரம்பிய பாகீரதி அம்மா, இந்த தள்ளாத வயதிலும், 4ம் வகுப்பு தேர்வை எழுதி 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் கணக்கில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார். ெதாடர்ந்து படிக்கவும் விரும்புகிறார். இவர்களைப் போன்றோர் தாம் இந்த நாட்டின் பலம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மூலக்கதை