நியூசிலாந்து 348 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் இந்தியா திணறல்

தினகரன்  தினகரன்
நியூசிலாந்து 348 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் இந்தியா திணறல்

வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 2வது இன்னிங்சில் 144 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து போராடி வருகிறது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது. சவுத்தீ மற்றும் அறிமுக வேகம் ஜேமிசன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 165 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (68.1 ஓவர்). ரகானே 46, அகர்வால் 34, ஷமி 21, பன்ட் 19, பிரித்வி 16 ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் ஜேமிசன், சவுத்தீ தலா 4 விக்கெட், போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொ டர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்திருந்தது. பிளண்டெல் 30, டெய்லர் 44, வில்லியம்சன் 89, நிகோல்ஸ் 17 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். வாட்லிங் 14, கிராண்ட்ஹோம் 4 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.வாட்லிங் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் பூம்ரா வேகத்தில் பன்ட் வசம் பிடிபட்டார். சவுத்தீ 6 ரன்னில் வெளியேறினார். 8வது விக்கெட்டுக்கு கிராண்ட்ஹோமுடன் இணைந்த கைல் ஜேமிசன் அதிரடியாக விளையாட, நியூசி. ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் 71 ரன் சேர்த்து மிரட்டினர். ஜேமிசன் 44 ரன் (45 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), கிராண்ட்ஹோம் 43 ரன் (74 பந்து, 5 பவுண்டரி) விளாசி அஷ்வின் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 11வது வீரராகக் களமிறங்கிய டிரென்ட் போல்ட் 38 ரன் சேர்த்து (24 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) இஷாந்த் வேகத்தில் பன்ட் வசம் பிடிபட, நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (100.2 ஓவர்). இந்திய பந்துவீச்சில் இஷாந்த் 5, அஷ்வின் 3, ஷமி, பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 183 ரன் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. பிரித்வி ஷா 14 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் லாதம் வசம் பிடிபட்டார். அகர்வால் - புஜாரா இணைந்து 2வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்தனர். மிக நிதானமாக விளையாடிய புஜாரா 11 ரன் எடுத்து (81 பந்து) போல்ட் வேகத்தில் கிளீன் போல்டானார். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த அகர்வால் 58 ரன் (99 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சவுத்தீ பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வாட்லிங் வசம் பிடிபட்டார். கேப்டன் விராத் கோஹ்லி 19 ரன் எடுத்து (43 பந்து, 3 பவுண்டரி) போல்ட் வேகத்தில் வாட்லிங் வசம் பிடிபட்டார். 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்துள்ளது. ரகானே 25 ரன், ஹனுமா விஹாரி 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, இந்தியா இன்னும் 39 ரன் பின்தங்கி இருப்பதால் கடும் நெருக்கடியுடன் இன்று 4ம் நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

மூலக்கதை