மீண்டும் வெல்லுமா இந்திய பெண்கள் அணி | பெப்ரவரி 23, 2020

தினமலர்  தினமலர்
மீண்டும் வெல்லுமா இந்திய பெண்கள் அணி | பெப்ரவரி 23, 2020

பெர்த்: இன்று நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை சந்திக்கிறது. இந்திய அணி மீண்டும் அசத்தினால் இரண்டாவது வெற்றி பெறலாம். 

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் மோதுகின்றன. இன்று பெர்த்தில் நடக்கவுள்ள ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணியை எதிர் கொள்கிறது.

ஏமாற்றும் பேட்டிங்

இந்திய அணி தொடரை வெற்றியுடன் துவக்கிய உற்சாகத்தில் உள்ளது. முதல் லீக் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 16 வயது வீராங்கனை ஷபாலி வர்மா ஜொலிக்கிறார். கடந்த முறை 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என அசத்தினார். இவருடன் மந்தனா இணைவதால் துவக்கம் பலமாக மாறுகிறது. ஆனால், ஜெமிமா, வேதா உள்ளிட்டோர் ஏமாற்றுகின்றனர். கடந்த ‘டுவென்டி–20’ முத்தரப்பு தொடரில் துவக்க வீராங்கனைகள் ஏமாற்றியபோது சுமையை ஏற்க மற்றவர்கள் திணறினர். இது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலும் தொடர்ந்தது. இதில் இன்று நிச்சயமாக மாற்றம் தேவை. கேப்டன் ஹர்மன்பிரீத் வியூகம் நன்றாக கைகொடுக்கிறது. 

பூனம் நம்பிக்கை

சுழற்பந்துவீச்சில் பூனம் யாதவ் ஆதிக்கம் செலுத்துகிறார். முதல் போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு கைகொடுத்தார். இவருக்கு, 49 ரன்கள் விளாசிய ‘ஆல் ரவுண்டர்’ தீப்தி சர்மாவும் ‘சுழலில்’ பங்களிப்பு தருவது அவசியம். ‘வேகத்தில்’ ஷிகா பாண்டே நம்பிக்கை அளிக்கிறார். 

அனுபவ சல்மா

வங்கதேச அணியில் கேப்டன் சல்மா, ருமானா என ‘ஆல் ரவுண்டர்கள்’ பங்களிப்பு அதிகம். அனுபவ வீராங்கனை என்பதால் சல்மா (70 ‘டுவென்டி–20’ போட்டி) நெருக்கடி தரலாம். துவக்க வீராங்கனை பர்கானா, ‘டுவென்டி–20’யில் சதம் அடித்தவர். இவர் கடந்த 2018ல் நடந்த இந்திய அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற கைகொடுத்தார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த பெண்கள் ‘டுவென்டி–20’ சாலஞ்சர் தொடரில், மிதாலி தலைமையிலான வெலாசிட்டி அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் ஜஹானரா ஆலம் விளையாடி இருந்தார். இவர் இந்திய வீராங்கனைகளின் பலம், பலவீனத்தை தெரிந்து வைத்திருப்பது நமது அணிக்கு பின்னடைவு. 

இரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இந்தியா 9, வங்கதேசம் 2 போட்டிகளில் வென்றுள்ளன. கடைசியாக நடந்த ஐந்து போட்டிகளில் இந்தியா 3ல் வென்றது.

மிரட்டும் மழை வாய்ப்பு 

போட்டி நடக்கவுள்ள பெர்த் பகுதியின் இன்றைய வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 30, குறைந்தபட்சம் 21 டிகிரி செல்சியாக இருக்கும். மழை வர 80 சதவீதம் வாய்ப்புள்ளது.

மூலக்கதை