ஜாகிரை முந்தினார் இஷாந்த்  | பெப்ரவரி 23, 2020

தினமலர்  தினமலர்
ஜாகிரை முந்தினார் இஷாந்த்  | பெப்ரவரி 23, 2020

தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என நான்கு அணிகளுக்கு எதிராக டெஸ்ட் அரங்கில், அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் இஷாந்த் (121 விக்.,) முதலிடம் பிடித்தார். இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே முன்னாள் வீரர்கள் ஜாகிர் கான் (120), கபில் தேவ் (117) உள்ளனர்.

3

டெஸ்ட் அரங்கில், அன்னிய மண்ணில் அதிக முறை (9), ஒரே இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட் வீழ்த்திய இந்திய ‘வேகங்கள்’ பட்டியலில், இஷாந்த் (60 போட்டி) 3வது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் முறையே கபில் தேவ் (66 போட்டி, 12 முறை), கும்ளே (69 போட்டி, 10 முறை) உள்ளனர்.

11

டெஸ்ட் அரங்கில் ஒரே இன்னிங்சில் அதிக முறை (11) 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில், 2வது இடத்தை முன்னாள் வீரர் ஜாகிர் கானுடன் (92 போட்டி) பகிர்ந்து கொண்டார். இதை இஷாந்த் 97 போட்டியில் எட்டி உள்ளார். முதலிடத்தில் ஜாம்பவான் கபில் தேவ் (131 போட்டி, 23 முறை) உள்ளார்.

48

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, கடைசியாக சர்வதேச அரங்கில் நியூசிலாந்துக்கு எதிரான 5வது ‘டுவென்டி–20’ போட்டியில், சவுத்தீயை அவுட்டாக்கி இருந்தார். பின், மூன்று ஒரு நாள் போட்டியிலும் ஏமாற்றினார். நேற்று, பும்ரா சர்வதேச அரங்கில் 48 ஓவர் வீசியதற்குப்பின், முதல் முறையாக வாட்லிங்கை அவுட்டாக்கினார்.

‘ஹெல்மெட்டில்’ அடி

நியூசிலாந்தின் சவுத்தீ வீசிய 55வது ஓவரின் 2வது பந்தை ரகானே எதிர் கொண்டார். ‘பவுன்சராக’ வந்த பந்து இவரது ‘ஹெல்மெட்டை’ பலமாக தாக்கியது. பின், சவுத்தீ, கேப்டன் வில்லியம்சன் உள்ளிட்டோர் ரகானேவிடம் விசாரித்தனர். இந்திய அணி ‘பிசியோதெரபிஸ்ட்’ பரிசோதித்தபின், ரகானே ஆட்டத்தை தொடர்ந்தார்.

2003

கடந்த 2003ல் பாகிஸ்தானுக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 170 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆனால், இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. நியூசிலாந்து மண்ணில் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு அதிகமாக முன்னிலை பெற்ற அணி வீழ்ந்தது இதுவே முதல் முறை.

சவுத்தீ ‘300’

இந்தியாவின் மயங்க் அகர்வாலை அவுட்டாக்கிய, சவுத்தீ சொந்த மண்ணில் மூன்றுவித போட்டியிலும் 300 விக்கெட்டை கைப்பற்றிய முதல் நியூசிலாந்து பவுலர் என்ற சாதனை படைத்தார். இவர் 153 போட்டியில் இலக்கை எட்டி உள்ளார். இதற்கு முன், நியூசிலாந்து ‘சுழல்’ வீரர் வெட்டோரி 193 போட்டியில் 299 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இப்பட்டியலில், பவுல்ட் (102 போட்டி, 277 விக்.,) மூன்றாவது இடம் வகிக்கிறார். 

ஜேமிசன் உலக சாதனை

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேமிசன், 45 பந்தில் 44 ரன்கள் விளாசினார். இவர் அறிமுக டெஸ்டில் அதிக சிக்சர் (4) விளாசிய வீரர்கள் பட்டியலில், முதலிடத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிளார்க் உடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். இவர் இந்திய அணிக்கு எதிராக கடந்த 2004ல் பெங்களூருவில் நடந்த டெஸ்டில் 4 சிக்சர் அடித்திருந்தார். 

* டெஸ்ட் அரங்கில், 9வது இடத்தில் அறிமுக வீரராக களமிறங்கி அதிக ரன் (44) அடித்த நியூசிலாந்து வீரரானார். இதற்கு முன், 1965ல் இந்திய அணிக்கு எதிராக கோல்கட்டாவில் நடந்த டெஸ்டில் கிரகாம் விவியன் 43 ரன்கள் எடுத்திருந்தார்.

தப்பிக்க முடியமா

இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் கூறுகையில்,‘‘ எதிரணிக்கு எந்த அளவுக்கு இலக்கு நிர்ணயித்தால், நமது அணி தப்பிக்க முடியும் என கேட்கின்றனர். இன்னும் 6 ‘செஷன்’ (பகுதி) மீதமுள்ளது. எது பாதுகாப்பான இலக்கு என தற்போது கூற முடியாது,’’ என்றார்.

 

 

மூலக்கதை