கொரோனா வைரஸ் பலி எதிரொலி: சிங்கப்பூர் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் பலி எதிரொலி: சிங்கப்பூர் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் உருவாகிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ்  25 நாடுகளில் பரவியிருக்கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் இந்நாட்டில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1109 ஆக அதிகரித்தது. அதேபோல் பலியானோர்  எண்ணிக்கை 118 ஆக இருந்தது. நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 2345 ஆக அதிகரித்துள்ளது. 75,567 பேர் வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெறுகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடாக தென்  கொரியா மாறியுள்ளது. இந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 100 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இங்கு வைரஸ் பாதிப்புள்ளோர் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியா மட்டுமின்றி ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா  வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே தென் கொரியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், தாய்வான் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பலி ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானிலும் 2 பேர் இறந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சிறிய நாடான சிங்கப்பூரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் அங்கு கடந்த பிப்ரவரி 16-ம் தேதி நிலவரப்படி 75 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அவற்றின்  ஊழியர்கள், தொழில்முனைவோர் எனப் பல்வேறு தரப்பினரும் பின்பற்ற வேண்டிய சில அறிவுறுத்தல்கள், விதிமுறைகளையும் சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது. அவற்றைப் பின்பற்றவில்லை எனில் நடவடிக்கை பாயும் என  எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, டெல்லியில்  கொரோனா தடுப்பு குறித்து உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சரவை செயலாளர் அளித்த பேட்டியில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதை முடிந்த  அளவுக்கு இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பிப்ரவரி 24-ம் தேதி முதல் மலேசியா, நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, வியாட்நாம உள்ளிட்ட  நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும். சீனா, ஹாங்காய், சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான்,  தென்கொரியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தொடர்ந்து கொரானா பரிசோதனை நடைபெற்று வருகிறது. காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு  தெரிவித்தார்.

மூலக்கதை