30 முறை உட்கார்ந்து எழுந்தால் இலவசமாக பிளாட்பார்ம் டிக்கெட்: மத்தியமைச்சர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரல்

தினகரன்  தினகரன்
30 முறை உட்கார்ந்து எழுந்தால் இலவசமாக பிளாட்பார்ம் டிக்கெட்: மத்தியமைச்சர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரல்

புதுடெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உடல் ஆரோக்கியம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ‘ஆரோக்கியமான இந்தியா’ என்ற திட்டம்  அமல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த புதிய முயற்சியை  ஊக்குவிக்கும் வகையில், ரயில் நிலையங்களில் தோப்புக்கரணம் அதாவது உட்கார்ந்து எழுந்தால் (ஸ்குவாட்) இலவசமாக பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கும் திட்டத்தை  ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் இலவச டிக்கெட் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பாக, ஒருவர் 3 நிமிடத்தில் 30 முறை உட்கார்ந்து எழுந்தால் சென்சார் மூலம் அதனை உணரும் இயந்திரம், இலவச நடைமேடை டிக்கெட்டை வழங்கும். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், இந்த டிக்கெட் முறையே வரவேற்று, டெல்லி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் டிக்கெட் இயந்திரம் முன்பு தோப்புகரணம் போல உட்காந்து எழும் வீடியோவை  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பல்வேறு தரப்பினர் ரிடுவிட் செய்து வரவேற்று கருத்து பதிவிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை