தொடர்ந்து ஜெட் வேகத்தில் ஏறுமுகம் தங்கம் சவரனுக்கு ரூ168 அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
தொடர்ந்து ஜெட் வேகத்தில் ஏறுமுகம் தங்கம் சவரனுக்கு ரூ168 அதிகரிப்பு

* 53 நாளில் ரூ2,696 உயர்ந்தது * விற்பனை 30 சதவீதம் சரிந்ததுசென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றும் சவரனுக்கு  ரூ168 உயர்ந்து, சவரன் ரூ32,576க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை  உயர்வால் நகைக்கடைகளில் 30 சதவீதம் அளவுக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக  வியாபாரிகள் கூறினர். தங்கம் விலை கடந்த ஜனவரி மாதம் முதல் உயர்ந்து  வருகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி  வந்தது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் பிப்ரவரி மாதம் முதல் தங்கம் விலை  மேலும் உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து புதிய  உச்சத்தை ெதாட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, கடந்த  17ம் தேதி ஒரு சவரன் ரூ31,216க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 18ம் தேதி  ஒரு சவரன் ரூ31,408, 19ம் தேதி ரூ31,720, 20ம் தேதி ரூ31,824க்கும்  விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை  கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ71 அதிகரித்து ஒரு கிராம்  ரூ4,051க்கும், சவரனுக்கு ரூ584 அதிகரித்து சவரன் ரூ32,408க்கும்  விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையை  படைத்தது. முதல் முறையாக கிராம் ₹4 ஆயிரத்தை கடந்தது. இந்த அதிர்ச்சியை  தாங்குவதற்குள் நேற்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ21 அதிகரித்து, ஒரு கிராம் ரூ4072க்கும், சவரனுக்கு ரூ168 அதிகரித்து ஒரு சவரன் ரூ32,576க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து  அதிகரித்து வருவது நகை வாங்குவோருக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தி வருகிறது.  திருமணம் உள்ளிட்ட விசேஷத்திற்காக நகை வாங்க பணத்தை சிறுக, சிறுக சேர்த்து  வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, இந்த விலை ஏற்றம் கூடுதல்  சுமையை ஏற்படுத்தியுள்ளதாக கூறி வருகின்றனர். தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்த போதிலும் இன்னும் விலை உயரத்தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இன்று  ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால்,  நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை)  மீண்டும் மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் மேலும் என்ன மாற்றம்  ஏற்பட போகிறது என்பது தெரியவரும். தங்கம் விலை ஜனவரி 1ம் தேதி சவரன்  ரூ29,880க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு விலை உயர்ந்து நேற்று வரை,  அதாவது, 53 நாட்களில் சவரனுக்கு ₹2696 அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமே கொரோனா வைரஸ் தான். இன்னும் பல இடங்களில்  கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது மேலும் பெரிய பீதியை பொருளாதாரத்தில்  ஏற்படுத்தி வருகிறது. அதுவும் விலை உயர்வுக்கு காரணம். இன்னும் விலை உயர  தான் வாய்ப்புள்ளது. சொல்லப்போனால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு விலை உயர  தான் வாய்ப்புள்ளது. சவரன் ரூ33,000 வரை வரும். தங்கம் விலை உயர்வால்  நகைக்கடைகளில் 30 சதவீதம் அளவுக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை