உபி.யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் டன் தங்கத்தின் மதிப்பு ரூ12 லட்சம் கோடி: உலக கையிருப்பில் 2வது இடத்தை இந்தியா பிடிக்கும்

தினகரன்  தினகரன்
உபி.யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் டன் தங்கத்தின் மதிப்பு ரூ12 லட்சம் கோடி: உலக கையிருப்பில் 2வது இடத்தை இந்தியா பிடிக்கும்

சோன்பத்ரா: உத்தர பிரேதச மாநிலத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது. இது, தற்போது இந்தியாவின் கையிருப்பில் உள்ள தங்கத்தை விட 5 மடங்கு அதிகமாகும். உ.பி.யின் சோன்பத்ரா மாவட்டத்தில் தங்கம் அதிகளவில் இருப்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் இதற்கான ஆய்வுப் பணிகளை தொடங்கினர். அதன் பிறகு, அது கிடப்பில் கிடந்தது. பின்னர், 20 ஆண்டுகளுக்கு முன் இந்திய புவியியல் ஆய்வுத் துறை மீண்டும் இந்த ஆய்வை தொடங்கியது. இந்நிலையில், சோன்பத்ரா மாவட்டத்தின் சோன் பகாதி, ஹர்தி பகுதிகளில் 3 ஆயிரம் டன் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட சுரங்க அதிகாரி கே.கே. ராய் கூறுகையில், ``கடந்த 1992-93ம் ஆண்டில் இந்திய புவியியல் ஆய்வுத் துறை இதற்கான பணியைத் தொடங்கியது. தற்போது சோன்பத்ரா மாவட்டத்தின் சோன் பகாதியில் 2,943.26 டன், ஹர்டி பகுதியில் 646.16 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த சர்வதேச மதிப்பு 12 லட்சம் கோடி. இந்த தங்க பாளங்களைத் தோண்டி எடுக்கும் பணிக்கான ஒப்பந்த புள்ளி விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்தியாவின் தற்போதைய தங்க கையிருப்பு 626 டன். புதிய தங்கத்தையும் சேர்த்தால் உலகளவில் தங்கத்தை அதிகளவில் கையிருப்பு ைவத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தை பிடிக்கும்,’’ என்றார். 160 கிலோ மட்டுமே கிடைக்கும் இந்திய புவியியல் துறை விளக்கம்கொல்கத்தாவில் இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் பொது இயக்குனர் எம்.ஸ்ரீதர் நேற்று அளித்த பேட்டியில், ``சோன்பத்ரா மாவட்ட சுரங்க அதிகாரி கூறியது போல், அங்கு 3 ஆயிரம் டன் தங்கம் கிடையாது. இந்திய புவியியல் ஆய்வுத் துறை கடந்த 1998-2000ம் ஆண்டுகளில் சோன்பத்ராவில் ஆய்வு செய்து உபி அரசுக்கு அறிக்கை அளித்தது. அதில், சோன்பத்ராவில் 52,806.25 டன் இரும்பு வளம் இருக்கிறது என்றும், சோன் பகாதி துணை மண்டலத்தில் 170 மீட்டர் ஆழத்தில் ஒரு டன்னுக்கு 3.03 கிராம்  சராசரி தரத்திலான தங்கம் மட்டுமே எடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுரங்கம் தோண்டினால் 160 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது,’’ என்றார். இந்த பேட்டியின் மூலம், சோன்பத்ரா தங்க சுரங்க விவகாரம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.மீண்டும் உயிர் பெறுமா?கோலார் தங்க சுரங்கம் கர்நாடகாவில் உள்ள ‘கோலார் தங்க வயல்’ தான் (கேஜிஎப்), ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தங்கச் சுரங்கமாக இருந்தது. நாட்டின் மொத்த தங்க உற்பத்தியில் 95 சதவீதம் இங்கு கிடைத்தது. 1880ம் ஆண்டில் ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் என்ற நிறுவனம்தான் இங்கே முதலில் சுரங்கம் தோண்ட தொடங்கியது. சுதந்திரத்துக்குப் பிறகு கடந்த 1956ம் ஆண்டில் மைசூர் அரசு இந்த சுரங்கத்தை அரசுக்குச் சொந்தமாக்கியது. அதன் பெயர் ‘பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட்’ என்று மாறியது. கடந்த 136 ஆண்டுகளில் இங்கு 800 மெட்ரிக் டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் தங்கம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட 26 பகுதிகளில், 8 இடங்களில் மட்டுமே இதுவரை தங்கம் எடுக்கப்பட்டுள்ளது. தங்கம் கிடைப்பது குறைந்ததாலும், உற்பத்தி செலவு அதிகரித்ததாலும் கடந்த 2001ம் ஆண்டு, மார்ச்சில் இந்த சுரங்கத்தை அரசு மூடியது. தற்போது, இதை மீண்டும் தொடங்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதை ஏற்று நடத்த வேதாந்தா நிறுவனம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. உத்தர பிரசேத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கச் சுரங்கம், இதை விட பெரிதாக இருக்கும்.

மூலக்கதை