உலகமே அஞ்சிய விவகாரங்களில் 130 கோடி இந்திய மக்களும் தீர்ப்பை முழு மனதோடு ஏற்றுக் கொண்டனர்: பிரதமர் மோடி பாராட்டு

தினகரன்  தினகரன்
உலகமே அஞ்சிய விவகாரங்களில் 130 கோடி இந்திய மக்களும் தீர்ப்பை முழு மனதோடு ஏற்றுக் கொண்டனர்: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: ‘‘உலகமே விவாதித்த, அச்சம் கொண்டிருந்த சர்ச்சைக்குரிய விவகாரங்களில், சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை 130 கோடி இந்தியர்களும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டனர்,’’ என பிரதமர் மோடி பாராட்டினார். டெல்லியில் ‘மாறிவரும் உலகமும் நீதித்துறையும்’ என்ற தலைப்பில் சர்வதேச நீதித்துறை மாநாடு உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று தொடங்கியது. 20 நாடுகளைச் சேர்ந்த நீதித்துறையினர் பங்கேற்ற இம்மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி  வைத்து பேசியதாவது: பாலின சமநீதி இல்லாமல் உலகில் எந்த நாடும், எந்த சமூகமும் வளர்ச்சியை எட்ட முடியாது. அந்த வகையில், சமத்துவ உரிமையின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பாலின சமநீதியை உறுதிப்படுத்தி வருகிறது. சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு, ராணுவ சேவையில் பெண்கள் நியமனம், பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசு திட்டங்கள் மற்றும் சம்பளத்துடன் கூடிய பிரசவகால விடுப்பு, முத்தலாக் தடை, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை, திருநங்கைகளுக்கான உரிமை போன்றவற்றை வழங்கிட சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மத்தியில் சமநிலையை ஏற்படுத்த, சுற்றுச்சூழல் நீதியை மறுவரையறை செய்யும் விதமாக இந்திய நீதித்துறை செயல்படுவது பாராட்டுக்குரியது. நீதித்துறையின் அடித்தளமாக கருதப்படும் உண்மை மற்றும் சேவைக்காக  தன் வாழ்வை அர்ப்பணித்தவர் மகாத்மா காந்தி. அவரும் ஒரு வழக்கறிஞர் என்பதை நாம் அறிவோம். சமீபத்தில், உலகளாவிய விவாதங்களுக்கு உட்பட்ட சில முக்கியமான நீதித்துறை தீர்ப்புகள் வந்துள்ளன. இந்த தீர்ப்புகளுக்கு முன்னர், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பல கவலைகளையும், சந்தேகங்களையும் வெளிப்படுத்தப்பட்டன. ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்டதும் (அயோத்தி வழக்கு) அதை 130 கோடி இந்தியர்களும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளில், அரசின் பல்வேறு நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. தேவையற்ற 1500 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், சமூக அமைப்பை வலுப்படுத்த தேவையான முக்கிய சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பேசுகையில், ‘‘சட்டத்தின் ஆட்சி என்பது உலகின் நவீன அரசிலயமைப்புகளின் மிக அடிப்படையான அம்சமாகும். அதன் வெற்றி, உலகம் முழுவதும் நீதித்துறை அதன் சவால்களை முறியடிப்பதை பொறுத்தே அமையும். அந்தவகையில், இந்தியா பல கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளால் உருவான நாடாகும். அனைத்து வகை நாகரிகங்களில் உள்ள கலாச்சார சட்டங்களையும் இந்திய நீதித்துறை ஒருங்கிணைத்துள்ளது,’’ என்றார்.பல்துறை மேதாவி பிரதமர் மூத்த நீதிபதி புகழாரம்விழாவில் நன்றியுரை ஆற்றிய உச்ச நீதிமன்றத்தின் 3வது மூத்த நீதிபதியான அருண் மிஸ்ரா, ‘‘கண்ணியமான மனிதர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இங்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய பல்துறை மேதாவியான பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர், உலகளவில் சிந்தித்து, அதை நம் நாட்டிற்கு ஏற்ற வகையில் நடைமுறைப்படுத்துகிறார். தொலைநோக்கு பார்வை கொண்டவரான பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா, சர்வதேச சமூகத்திற்கு உற்ற நண்பனாகவும் பொறுப்பான நாடாகவும் திகழ்கிறது,’’ என வெகுவாக பாராட்டினார்.

மூலக்கதை