தீவிரவாதிகளுக்கு கார் கடத்திய வழக்கு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

தினகரன்  தினகரன்
தீவிரவாதிகளுக்கு கார் கடத்திய வழக்கு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

திருவனந்தபுரம்: கேரளாவில்  கார்களை வாடகைக்கு எடுத்து தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்த  வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான முகமது ரபீக்கை கேரள  போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த  ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனக்கு சொந்தமான காரை வாடகைக்கு விட  விரும்புவதாக பத்திரிகையில் 6 மாதங்களுக்கு முன் விளம்பரம்  செய்தார். அதை பார்த்து  திருச்சூர் வாடானப்பள்ளியை சேர்ந்த  இலியாஸ் (37) என்பவர் அவரை அணுகி, காரை வாடகைக்கு எடுத்து சென்றார். பின்னர், தலைமறைவாகி விட்டார். இதனால், கோட்டயம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் புகார் செய்தார்.  இலியாசை தந்திரமாக பிடிக்க திட்டமிட்ட போலீசார், பத்தனம்திட்டாவில் ஒரு கார் வாடகைக்கு இருப்பதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். இதைப் பார்த்து செல்போனில் தொடர்பு கொண்ட இலியாசை, ரயிலில் வந்தபோது போலீசார் பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது முக்கிய கூட்டாளி நிஷாத்தை (37) கைது பிடித்தனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத  இயக்கத்தை சேர்ந்த இவர்கள், தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவனான முகமது  ரபீக் என்ற தொப்பி ரபீக் (58) என்பவருக்கு கேரளாவில் இருந்து  80க்கும் மேற்பட்ட கார்களை வாடகைக்கு எடுத்து விற்பனை செய்து வந்துள்ளனர். ரபீக் இந்த கார்களை விற்று, தீவிரவாத இயக்கத்திற்கு  பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்,  தலைமறைவாக இருந்த ரபீக்கை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். இவர் 1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 14  ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். இவரிடம்  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.டிஎஸ்பி.க்கு கொலை மிரட்டல்முகமது ரபீக் கோவையில் பதுங்கி இருப்பதாக டிஎஸ்பி ஸ்ரீகுமார், இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான கேரள தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. உடனே, கோவை விரைந்தது. ஆனால், அவனுக்கு இந்த விஷயம் தமிழக போலீசார் மூலம் கசிந்ததும் தப்பி விட்டான். பின்னர், ரகசிய இடத்தில் தலைமறைவாக இருந்த ரபீக், தனது அண்ணன் மகளை இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு கொண்டு சென்று விடவும் திரும்ப அழைத்து வரவும் மட்டுமே வெளியே வருவார் என்பதை அறிந்து கொண்ட கேரள போலீஸ், முகமது ரபீக் கல்லூரியில் இருந்து திரும்பும் வழியில் அவரை மடக்கி பிடித்து கேரளாவுக்கு அழைத்து வந்தனர். அப்போது, ‘விரைவில் சிறையில் இருந்து வெளிவருவேன். இந்தியா முழுவதும் எனக்கு ஆட்கள் உள்ளனர்,’ என்று எஸ்பி ஜெயதேவை அவன் மிரட்டியுள்ளான்.

மூலக்கதை