மனநிலை பாதிப்பு சிகிச்சை கேட்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி: சிறை அதிகாரி கருத்தை ஏற்று நீதிபதி உத்தரவு

தினகரன்  தினகரன்
மனநிலை பாதிப்பு சிகிச்சை கேட்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி: சிறை அதிகாரி கருத்தை ஏற்று நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: தனக்கு மனநிலை பாதித்துள்ளதால் அதற்கான சிகிச்சை அளிக்க உத்தரவிடும்படி கோரிய நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 2 முறை தண்டனையை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டது. ஆனால், இவர்கள் மறுசீராய்வு மனு, கருணை மனு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என பல்வேறு வகைகளில் தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடுத்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 3ம் தேதி தண்டனையை நிறைவேற்ற மீண்டும் தேதி குறிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தூக்கு கைதிகளில் ஒருவனான வினய் சர்மா, சிறையில் உள்ள சுவற்றில் தனது தலையை வேண்டும் என்றே மோதி காயத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளான். இந்திய தண்டனை சட்டப்படி, காயமடைந்த குற்றவாளியை தூக்கில் போட முடியாது. அதற்காக, இவன் இதை செய்துள்ளான். இதைத் தொடர்ந்து, இவனுடைய மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கு விரிவான சிகிச்சை அளிக்கும்படியும் கோரி, டெல்லி நீதிமன்றத்தில் இவன் சார்பில் கடந்த 20ம் ேததி வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திகார் சிறை அதிகாரிஅளித்த வாக்குமூலத்தில், ‘நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் நாள் தவறாமல் மருத்துவ சோதனை நடைபெறுகிறது. அவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர்.  அவர்களுக்கு மனநல பாதிப்பில்லை என மனோதத்துவ டாக்டரும் உறுதியளித்து உள்ளார். வினய் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் மேலோட்டமானது. மனக்கோளாறு எதுவும் அவருக்கு கிடையாது என்பதையும் சிறையில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளில் நிரூபணம் ஆகியுள்ளது. எனினும், மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் நடிக்கிறார்,’’ என்றார். இதைத் தொடர்ந்து, வினய் சர்மாவின் மனுவை நீதிபதி தர்மேந்திர ராணா தள்ளுபடி செய்தார்.

மூலக்கதை