விடுமுறை நாளிலும் வரி வசூல் தீவிரம்! இலக்கு எட்ட மாநகராட்சி முனைப்பு

தினமலர்  தினமலர்
விடுமுறை நாளிலும் வரி வசூல் தீவிரம்! இலக்கு எட்ட மாநகராட்சி முனைப்பு

திருப்பூர்:மாநகராட்சி பகுதியில் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை நுாறு சதம் முழுமையாக வசூலிக்க திட்டமிட்டு வரி வசூல் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விடுமுறை நாளிலும் வசூல் மையங்கள் செயல்படுகிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 2.25 லட்சம் சொத்து வரி விதிப்புகள் மூலம், 80 கோடி ரூபாய்; 1.80 லட்சம் குடிநீர் இணைப்புகள் மூலம் குடிநீர் கட்டணம், 22 கோடி ரூபாய் தொழில் வரி உள்ளிட்ட பிற இனங்கள் மூலம் 4 கோடி ரூபாய் என மொத்தம் 106 கோடி ரூபாய் வரியின வரவு உள்ளது.
கடந்த ஜன., மாதம் முதல் தீவிர வரிவசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், சொத்து வரி 43 கோடி ரூபாய்; குடிநீர் கட்டணம் 12 கோடியும் பிற இனங்கள் மூலம் 2.5 கோடி ரூபாய் என இது வரை 57.5 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் முழுமையான அளவு வரியினங்களை வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஊழியர்கள் தீவிர வரி வசூல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக மைய அலுவலகம், மண்டல அலுவலகங்கள், பிரிவு அலுவலகங்கள் மற்றும் குமரன் வணிக வளாகம் ஆகியவற்றில் வரி வசூல் மையங்கள் இயங்கி வருகின்றன. தற்போது கூடுதல் கவுன்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் மொத்தம் 18 கவுன்டர்கள் தற்போது செயல்படுகிறது.
தீவிர வரி வசூல் செய்யும் வகையில் அனைத்து கவுன்டர்களும் நிதியாண்டு இறுதி வரை ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:00 முதல் பகல் 2:00 மணி வரை இம்மையங்கள் அனைத்தும் செயல்படும் என வருவாய் பிரிவு உதவி கமிஷனர் தங்கவேல் ராஜன் தெரிவித்தார்.குழாய் இணைப்புதுண்டிப்பு:மாநகராட்சி பகுதியில், ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் கட்டணம் செலுத்தாத குடிநீர் குழாய் இணைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் துண்டித்து வருகின்றனர். அவ்வகையில் இதுவரை 588 இடங்களில் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை