சப்பாத்தியில் இருக்கலாம் தவிடு! கலப்படம் அறிய வழியிருக்கு

தினமலர்  தினமலர்
சப்பாத்தியில் இருக்கலாம் தவிடு! கலப்படம் அறிய வழியிருக்கு

கோவை:-வீட்டில் செய்யக்கூடிய எளிய சோதனை மூலம் கோதுமை மாவில், தவிடு கலப்படம் செய்யப்பட்டிருப்பதை கண்டறியலாம்.சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வும், சப்பாத்தி மீதான மோகமும், தமிழகத்தில் கோதுமை மாவு தேவை, விற்பனையை, பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதை பயன்படுத்திக் கொள்ளும் கலப்பட கும்பல், கோதுமை மாவுடன், தவிடு கலந்து, கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.ஆரோக்கியமான உணவு என கூறி, கோதுமையை தேர்வு செய்வோர் பலர். அவர்கள், கலப்படத்தை அறியாமல், கோதுமை மாவுடன் தவிட்டையும் சேர்த்து உண்பது நடந்து கொண்டிருக்கிறது. வீட்டிலேயே செய்யும் எளிய சோதனை மூலம், கலப்பட மோசடியை கண்டுபிடிக்கலாம்.
ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில், ஒரு ஸ்பூன் கோதுமை மாவை துாவுங்கள். சுத்தமான கோதுமை மாவு, சற்று நேரத்தில் தண்ணீரின் அடிப்பரப்புக்கு சென்று விடும். தவிடு கலப்படம் செய்யப்பட்டு இருந்தால், தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும்.தவிடு கலப்படம் செய்த கோதுமை மாவில், சப்பாத்தி தயார் செய்ய அதிக தண்ணீர் விட்டு பிசைய வேண்டியிருக்கும்.
இதில் தயார் செய்த சப்பாத்தியும், கடினமாக இருக்கும்.சுத்தமான கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால், கலப்படம் செய்த மாவில் தயார் செய்த சப்பாத்தி, சுவையற்றதாக இருக்கும்.* கோவை மாவட்டத்தில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது தொடர்பான புகார்களை, 94440 42322 என்ற, 'வாட்ஸ் அப்' எண்ணில் தெரிவிக்கலாம்.

மூலக்கதை