61 வயது மூதாட்டியால் சர்ச்சில் தொடங்கிய பேராபத்து தென் கொரியாவில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேர் வீட்டில் முடக்கம்

தினகரன்  தினகரன்
61 வயது மூதாட்டியால் சர்ச்சில் தொடங்கிய பேராபத்து தென் கொரியாவில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேர் வீட்டில் முடக்கம்

சியோல்: சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்நாட்டில் சர்ச்சுக்கு சென்ற மூதாட்டியால் பரவிய இந்த வைரஸ், பிரார்த்தனைக்கு வந்த 9,300 பேரை தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 77 ஆயிரம் பேர் இதில் பாதிக்கப்ட்டுள்ளனர். சீனாவில்  பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்து விட்டது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தற்போது தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நாட்டில் 200 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென 142 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனால், அங்கு கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவின் சியாங்டோ என்ற பகுதியில் டேனாம் என்ற மனநல மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 92 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு 2 பேர் ெகாரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அடுத்ததாக, சியாங்டோ அருகில் உள்ள நகரமான டேகுவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இது, தென்கொரியாவின் 4வது பெரிய நகரம். இங்கு ஷின்சியேன்ஜியில் உள்ள தேவாலாயத்தில் பிரார்த்தனைக்கு வநத 61 வயது பெண் ஒருவருக்கு கடந்த 10ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சாதாரண சளி, காய்ச்சில் என நினைத்து அவர் தேவாலயத்துக்கு தொடர்ந்து 4 பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். அவரிடமிருந்து தான், தேவாலயத்துக்கு வந்த பலருக்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. பிரார்த்தனைக்கு சென்ற 544 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. இதனால், பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேரும் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு  பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், இந்நாட்டில் பீதி  நிலவுகிறது. இத்தாலி, ஈரானில் முதல் பலிஇத்தாலியில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்ற 78 வயது முதியவர் நேற்று பலியானார். அதேபோல், ஈரானில் பாதிக்கப்பட்டுள்ள 10 பேரில், நேற்று ஒருவர் இறந்தார். இதன்மூலம், இந்த நாடுகளில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.இன்னும் அனுமதி இல்லைசீனாவின் வுகான் நகரத்துக்கு நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானப் படையின் சரக்கு விமானத்தை அனுப்ப இந்தியா விருப்பம் தெரிவித்தது. இதற்கு அனுமதி தருவதை சீனா தாமதித்து வருகிறது.இனிமேல் பரிசோதனைஜப்பான் வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் மொத்தம் 3,711 பேர் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கப்பலில் இருந்து வெளியேறிவிட்டனர். இன்னும் 1,000 பேர் மட்டுமே கப்பலில் உள்ளனர். இதில் உள்ள 138 இந்தியர்களில் 132 பேர் கப்பல் ஊழியர்கள். இவர்களுக்கு இனிமேல்தான் கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது.சிங்கப்பூருக்கு போகாதீங்க மத்திய அரசு எச்சரிக்கைகொரோனா வைரஸ் பரவுவதால், சீனா, ஹாங்காங், தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 21 விமான நிலையங்களில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும், சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணத்தை தவிர்க்கும்படி நாட்டு மக்களை மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

மூலக்கதை