அமெரிக்கா - தலிபான் போர் நிறுத்தம் ஹய்ய்யா... ஒரு வாரம் ஜாலி: ஆப்கானிஸ்தான் மக்கள் உற்சாகம்

தினகரன்  தினகரன்
அமெரிக்கா  தலிபான் போர் நிறுத்தம் ஹய்ய்யா... ஒரு வாரம் ஜாலி: ஆப்கானிஸ்தான் மக்கள் உற்சாகம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் - அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகளுக்கு இடையே ஒரு வார காலம் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொள்ளபட்டுள்ளது. இதனால் அங்கு அமைதி நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்திய அல்-கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனையும், அவர்களுக்கு ஆதரவளித்த தலிபான்களையும் ஒடுக்க அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானில் கடந்த 2001ல் இறங்கியது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தலிபான்களை, ஆப்கன் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வைக்கும் முயற்சிகளை சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா மேற்கொண்டது. ஆனால், அவ்வப்போது தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி இந்த பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்தினர். இந்நிலையில் தலிபான்கள், அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகளுக்கு இடையே ஒரு வாரம் காலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோகாவில் வரும் 29ம் தேதி  அமெரிக்கா- தலிபான்கள் இடையே இதற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானில் அமைதி நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. இந்த அமைதி முயற்சி வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள 13 ஆயிரம் அமெரிக்க வீரர்களில் பாதி பேர் திரும்ப அழைக்கப்படுவர். அமைதி முயற்சிகளை தலிபான்கள் மீண்டும் நிராகரித்தால், அமெரிக்க படையினர் அங்கு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபவர் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். இந்த அமைதி ஒப்பந்தத்தை ஆப்கான் மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.

மூலக்கதை