2021ல் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் முதல்ல வன்முறை, கொலையை நிறுத்துங்கப்பா...மேற்குவங்க மாநில ஆளுநர் ஆதங்கம்

தினகரன்  தினகரன்
2021ல் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் முதல்ல வன்முறை, கொலையை நிறுத்துங்கப்பா...மேற்குவங்க மாநில ஆளுநர் ஆதங்கம்

கொல்கத்தா: 2021ல் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், அரசியல் வன்முறை, கொலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று, மேற்குவங்க மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும், ஆட்சி அதிகாரம் மற்றும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் மம்தா, மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். இந்நிலையில் வடக்கு வங்காளத்தின் சிலிகுரில் நடந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, ஆளுநர் ஜகதீப் தங்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘மேற்குவங்க மாநில அரசியலை பொறுத்தவரை வன்முறை மற்றும் கொலைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. 2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தல்களைக் கருத்தில் கொண்டு அரசியல் வன்முறை மற்றும் கொலைகள் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். தற்போது நடக்கும் வன்முறை மற்றும் கொலைகள் தேர்தல்களுடன் தொடர்புடையதாக உள்ளது. அனைவரும் இதை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த 15 முதல் 20 நாட்களில் மாநில அரசாங்கத்துடனான எனது உறவு நன்றாக உள்ளது. இப்போது நாங்கள் சரியான பயணத்தை மேற்கொள்கிறோம். அரசுஅதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். மாநிலத்தில் அமைதியான தேர்தல்களை நடத்தும் தன்மை இருப்பதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நேரத்தில், ஆளுநரின் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து ஆளுநர் ஜகதீப் தங்கர் கூறுகையில், “வன்முறை முடிவுக்கு வர, அதன் மூல காரணத்தை கண்டறிய வேண்டும். சட்டவிரோத வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தின் அமைதியைக் பாதிக்காத வகையில், சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும். அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் நல்ல உறவு இருக்க வேண்டும். நாங்கள் எதிரிகளாக இருக்க முடியாது; நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட முடியாது” என்றார்.

மூலக்கதை