பன்முக திறமைக் கொண்ட அறிவாளி; சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொலை நோக்கு சிந்தனையாளர்: பிரதமர் மோடிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி புகழாரம்

தினகரன்  தினகரன்
பன்முக திறமைக் கொண்ட அறிவாளி; சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொலை நோக்கு சிந்தனையாளர்: பிரதமர் மோடிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி புகழாரம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் சிந்திக்கிறார், அதனை தேசிய அளவில் செயல்படுத்துகிறார் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா புகழாரம் சூட்டியுள்ளார். புதுடெல்லியில் சர்வதேச நீதித்துறை மாநாடு மற்றும்  நீதித்துறையும் மாறும் உலகமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை வழக்கறிஞர் எஸ்.ஏ.பாப்டே, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கள் பிரசாத், உச்சநீதிமன்ற  நீதிபதி அருண் மிஷ்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கில் உரையாற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா, பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். அவர் கூறுகையில், ஓர் உன்னத மனிதர் நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவர் ஒரு பல்துறை வித்தகர், பன்முக திறமைக் கொண்ட  அறிவாளி. சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொலை நோக்கு சிந்தனையாளர்; அவரால் உலகளவில் சிந்தித்து தேசியளவில் அதனை நடைமுறைப்படுத்துகிறார். இத்தகைய கருத்தரங்கம் நடைபெறுவதற்கும், அதில் எவ்வாறான தலைப்புகள்  இடம்பெற வேண்டும் என கூறியவர் பிரதமர் மோடி. அதற்காக அவருக்கு என்னுடைய நன்றிகள்; காலாவதியான 1,500 சட்டங்களை நீக்கியதற்காக பிரதமர் மோடி, சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்களுக்கு நன்றி என்றார். மேலும், தொடர்ந்து பேசிய அருண் மிஷ்ரா, உலகில் இருக்கும் பல்வேறு மக்கள் இந்தியாவில் எப்படி ஜனநாயகம் அவ்வளவு சீராக செயல்படுகிறது என ஆச்சரியமாக பார்க்கின்றனர். இந்தியாதான் உலகில் இருக்கும் பல்வேறு நாடுகளுக்கும் நல்ல  நண்பனாக இருக்கிறது. அதற்கு பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களே காரணம். இந்தியா சட்டத்தால் கட்டமைக்கப்பட்ட நாடு. இங்கு மக்கள் சட்டத்திற்கு கட்டுப்படுகிறார்கள். அதனால்தான் தீவிரவாதமின்றி மக்கள் நிம்மதியாக  வாழ்கிறார்கள் என்றார். இப்போது நாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம். நாட்டின் நலனுக்காக எதிர்காலத்துக்கு வலுவான உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது. அதனை படிப்படியாக செய்து வருகிறோம். நீதித்துறையே ஜனநாயகத்தின் முதுகெலும்பு  என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. அதேநேரத்தில் சட்டங்களை நிறைவேற்றும் நாடாளுமன்றம் நாட்டின் இதயம் போன்றது. அதனை நடைமுறைப்படுத்துபவரது மூளை போன்றது. இந்த மூன்றும் ஒன்றாக வேலை செய்தால்தான் ஒரு நல்ல  ஜனநாயக அரசால் சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.பிரதமர் மோடி உரை: கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய நீதித்துறை வளர்ச்சி மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக சமமான முக்கியத்துவத்தை வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாலின பாகுபாடு இல்லாமல் வழங்கப்படும் நீதியின்  மூலம் நாடும் சமூகமும் வளர்ச்சி பெறும் என்று தெரிவித்தார். மகளிரின் சம உரிமை குறித்து பேசிய பிரதமர் மோடி, திருநங்கைகள் குறித்த சட்டங்கள்,  முத்தலாக் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், ராணுவ பணிகளில் பெண்களின்  உரிமைகள் ஆகியவற்றிற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.ராணுவத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் 26 வார கால மகப்பேறு விடுமுறையை அரசு அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தகவல் பாதுகாப்பு, இணையதள குற்றம் ஆகியவை நீதித் துறையில் புதிய சவாலாக இருப்பதாகவும் மோடி  தெரிவித்தார். அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்களை நாடு மக்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டதாக கூறினார். உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட காந்தியின் வாழ்க்கை நீதித்துறையின் அடித்தளமாக  கருதப்படுகிறது என்று கூறிய அவர், உலகளாவில் விவாதங்களை எழுப்பிய சில விவகாரங்களில் நீதித்துறை முக்கியமான தீர்ப்புகளை வழங்கியது எனவும் அவர் தெரிவித்தார்.நீதிபதி எஸ்.ஏ.பாப்டே: முன்னதாக இம்மாநாட்டில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, முகலாயர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுகீஸ்யர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை உள்ளடக்கியதாக இந்தியா திகழ்கிறது என்று தெரிவித்தார்.  வலிமையான மற்றும் சுதந்திரமான நீதிமுறையை அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கி உள்ளதாக கூறினார்.மத்திய சட்டத் துறை அமைச்சர்: மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசிய போது, தீவிரவாதிகளுக்கும் ஊழல் செய்பவர்களுக்கும் தனித்துவ உரிமை இல்லை என்று தெரிவித்தார். இந்த உரிமையை அவர்கள் தவறாக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும்  அவர் கூறினார்.

மூலக்கதை