நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை: காந்தி ஆசிரம வருகை திடீர் ரத்து?....சபர்மதியில் விழா ஏற்பாடுகள் திடீரென நிறுத்தம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை: காந்தி ஆசிரம வருகை திடீர் ரத்து?....சபர்மதியில் விழா ஏற்பாடுகள் திடீரென நிறுத்தம்

காந்திநகர்: நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரும்நிலையில், அவர் காந்தி ஆசிரம வருகை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், சபர்மதியில் விழா ஏற்பாடுகள் திடீரென நிறுத்தப்பட்டது.


இந்தியாவுக்கு நாளை மறுநாள் (பிப். 24) வருகை தரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்குகிறார்.

நண்பகல் 12 மணிக்கு டிரம்ப் வரும் நிலையில், விமான நிலையத்திலிருந்து சபர்மதியில் காந்தி ஆசிரமம் வரை, லட்சக்கணக்கானோர் பங்கேற்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். இதற்காக அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவருடைய மனைவி மெலனியா டிரம்ப் மற்றும்  பிரதமர் மோடி ஆகியோரை வரவேற்க அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து  சபர்மதியில் காந்தி ஆசிரமம் வரையிலும் மொடேரா மைதானத்திலும் 22 கி. மீ  நெடுகிலும் மொத்தம் ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலகின்  மிகப்பெரிய விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் மொடேரா ஸ்டேடியத்தை டிரம்ப்  திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து அரங்க வளாகத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வு நடைபெறும்.

குஜராத் நிகழ்ச்சி நிரல்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்க, டிரம்ப் குழுவினர் அன்றையதினம் ஆக்ரா செல்ல இருப்பதால், சபர்மதியிலுள்ள காந்தி ஆசிரமத்திற்கான வருகை ரத்தாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரமத்தை ஒரு கோட்டை போன்று மாற்றுவதோடு, அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரமத்தில் சில உள்கட்டமைப்பும் மாற்றம் செய்யப்பட்டன. டிரம்ப் தம்பதியினர் ஆசிரமத்தில் அரை மணி நேரம் செலவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்காக, அந்த இடத்தில் ஒரு புதிய பார்க்கிங் இடம் உருவாக்கப்பட்டது. ஆசிரமத்தின் பின்புறம், பிரதமர் மோடி சபர்மதி ஆற்றங்கரை பகுதியை  டிரம்பிற்கு சுற்றிக் காட்டுவதற்காக ஒரு மேடையும் கட்டப்பட்டு வந்தது.

ஆசிரமத்தில் ஒரு சிறப்பு அறையும் ஒதுக்கினர். அங்கு முக்கிய பிரமுகர்கள் சிறிது நேரம் செலவிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், தற்போதைய தகவல்களின்படி, அங்கு நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

 வெளியுறவு செயலாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘பிப். 25ம் தேதி காலை, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு ராஷ்டிரபதி பவன் முன்பாக பாரம்பரிய வரவேற்பு வழங்கப்படும்.

அங்கிருந்து, அதிபர் டிரம்பும், அவரது மனைவியும் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு மரியாதை செலுத்துவதற்காக ராஜ் காட் செல்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், நாளை மறுநாள் அகமதாபாத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’   நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு டிரம்ப் ஆக்ரா செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம், காந்தி ஆசிரம வருகையைப் பற்றி எவ்வித குறிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும்  அதிபர் டிரம்ப், அங்கு நடைபெறும் இரவு விருந்தில் பங்கேற்கிறார்.   இதையடுத்து அன்றிரவே அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

மொத்தத்தில்  அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவில் 36 மணி நேரம் மட்டுமே  தங்கியிருக்கிறார்.

.

மூலக்கதை