தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினி: சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என விசாரணை ஆணையத்துக்கு விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினி: சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என விசாரணை ஆணையத்துக்கு விளக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியான விவகாரத்தில், நேரில் ஆஜராக விலக்கு கேட்டு  விசாரணை ஆணையத்துக்கு ரஜினி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் ஒரு மாதத்துக்கு மேல் நடந்தது.

கடைசியாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடந்தினர்.

அதில் 13 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.

காயம் அடைந்தவர்களையும், பலியானவர்களின் உறவினர்களையும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். அதில் நடிகர்கள் ரஜினி, விஜய் ஆகியோரும் நேரில் சென்று சந்தித்தனர்.

பின்னர் சென்னை திரும்பிய நடிகர் ரஜினி, போலீசாருக்கு ஆதரவாக பேட்டியளித்தார். இதற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதோடு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த விசாரணை ஆணையத்தில் நடிகர் ரஜினியையும் நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.

விசாரணை ஆணையத்தில், இதுவரை 18 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் மொத்தம் 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 445 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. 18-வது கட்ட விசாரணையில் அதிகமாக ஒளிப்பதிவாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

அவர்களிடமிருந்து போராட்டம் நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு நபர் ஆணையம் வருகிற 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த சம்மன் ரஜினிக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில், நடிகர் ரஜினி சார்பில் விசாரணை ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

அதில், நான் நேரில் ஆஜரானால் ரசிகர்கள் பெரிய அளவில் திரள்வார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும். தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை எழுத்துப் பூர்வமாக தந்தால், அதற்கு எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து ரஜினி விலக்கு கேட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை