தீவிரவாத நிதியுதவியை தடுக்க பாகிஸ்தானுக்கு மீண்டும் கெடு

தினகரன்  தினகரன்
தீவிரவாத நிதியுதவியை தடுக்க பாகிஸ்தானுக்கு மீண்டும் கெடு

இஸ்லாமாபாத்: தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க,  பாகிஸ்தானுக்கு நிதி நடவடிக்கை பணிக்குழு மீண்டும் அவகாசம் அளித்துள்ளது. தீவிரவாதத்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவும் நாடுகள் மீது சர்வதேச கண்காணிப்பு அமைப்பான, ‘நிதி நடவடிக்கை பணிக்குழு’ நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வகையில், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதை பாகிஸ்தான் தடுக்காததால், அது சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது. இதிலிருந்து பாகிஸ்தான் பெயர் நீக்கப்படுவதற்கு, 27 அம்ச செயல் திட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் ,மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவன் ஹபிஸ் சயீத் (70) கடந்தாண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டான். அவனுக்கு சமீபத்தில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இந்நிலையில், நிதிநடவடிக்கை குழு கூட்டம்(எப்ஏடிஎப்) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. இதில் நிதி நடவடிக்கை குழு நிபந்தனைகளை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த 650 பக்க அறிக்கையை பாகிஸ்தான் சமர்ப்பித்தது.  நிதி நடவடிக்கை பணிக்குழுவின் நேற்றைய கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது.  இதில், நிபந்தனையை நிறைவேற்ற, பாகிஸ்தானுக்கு மீண்டும் அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த அவகாசத்தில், தீவிரவாத நிதியுதவியை அது தடுக்கவில்லை என்றால், அது கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்.

மூலக்கதை