‘உண்டி வில்’ மூலம் குரங்குகளிடம் இருந்து அதிபர் டிரம்பை பாதுகாக்க போலீஸ் படை

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘உண்டி வில்’ மூலம் குரங்குகளிடம் இருந்து அதிபர் டிரம்பை பாதுகாக்க போலீஸ் படை

புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘உண்டி வில்’ மூலம் அதிபர் டிரம்பை குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளதாக, லண்டன் பத்திரிகையில் கிண்டல் செய்தி வெளியாகி உள்ளது. லண்டனில் இருந்து வெளியாகும் ‘இன்டிபென்டென்ட்’ என்ற செய்தி நிறுவனம், அமெரிக்க அதிபர் இந்தியா வருவது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுவாக அமெரிக்கா, இங்கிலாந்து பத்திரிகைகள் டிரம்பை பலவாறாக கிண்டலடித்தும், விலங்குகளுடன் தொடர்புபடுத்தி கார்ட்டூன்களை வெளியிட்டும் செய்தி வெளியிடுவது வழக்கம். அதன்படி, தற்போது மேற்கண்ட செய்தி நிறுவனம் அமெரிக்க அதிபரின் இந்திய வருகை குறித்து வெளியிட்ட செய்தி விவரம் வருமாறு:

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிற 24ம் தேதி இந்தியா செல்கிறார்.

முதல்நாள் குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் அவர், அந்நாட்டு பிரதமர் மோடியுடன் சேர்ந்து ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற நிகழ்வில் பங்கேற்கிறார். முன்னதாக, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கத்தை டிரம்ப் திறந்து வைக்கிறார்.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் இடம் வரை சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட வரவேற்பு ‘ரோட் ஷோ’ நிகழ்ச்சி நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவார். அடுத்த நாள் இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை  நடத்துவார்.

அமெரிக்கத் தூதரகத்தில் வர்த்தக தலைவர்களைச் சந்திப்பார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ராவில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கவுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க தாஜ்மஹாலை சுற்றியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

17ம் நூற்றாண்டை சேர்ந்த தாஜ்மஹால் பகுதியில் 500 முதல் 700 குரங்குகள் வாழ்கின்றன. இங்கு ஒவ்வொரு நாளும் 25,000 சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

வடக்கு நகரமான ஆக்ராவில் உள்ள நினைவுச்சின்னத்திலும் அதைச் சுற்றியும் உணவுக்காக குரங்குகள் நூற்றுக் கணக்கில் சுற்றித் திரிகின்றன. அவை பார்வையாளர்களை பல நேரங்களில் துன்புறுத்தி வருகின்றன.

மே 2018ல் இரண்டு பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்தபோது, அவர்கள் குரங்குகளால் தாக்கப்பட்டனர். அதே ஆண்டின் பிற்பகுதியில் 12 நாள் குழந்தை ஒன்று குரங்கு தாக்கியதில் இறந்தது.

அதனால், ​​அமெரிக்க அதிபர் தாஜ்மஹால் செல்லும் போது, குரங்குகளால் ஆபத்து இருக்க வாய்ப்புள்ளதாக உள்ளூர்வாசிகள் அச்சம் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘குரங்குகளின் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிக்கு செல்ல பயப்படுகிறார்கள்.

பெரும்பாலும் இங்கு மொட்டை மாடிகள் குரங்குகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களாக உள்ளன. இவ்வளவு பெரிய குரங்குகள் கூட்டம், டிரம்புடன் வரும் அதிகாரிகள் படையை தாக்கினால், அது ஒரு பெரிய சம்பவமாக இருக்கும்’ என்றனர்.

இதுகுறித்து, தாஜ்மஹால் பகுதி பாதுகாப்பு தலைவர் பிரிஜ் பூஷண் கூறுகையில், ‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘உண்டி வில்’ மூலம் குரங்குகளை தாக்கினால் அவை ஓடிவிடுகின்றன. தற்போது, ‘உண்டி வில்’ விடும் நபர்கள் மூலம் குரங்குகள் விரட்டப்பட்டு வருகின்றன.

போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்’ என்று, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

.

மூலக்கதை