அரசு பண்ணைகளில் மரக்கன்று, அழகுச்செடிகள்... வினியோகம்! திருமணம், சுப நிகழ்ச்சிகளில் வழங்க யோசனை

தினமலர்  தினமலர்
அரசு பண்ணைகளில் மரக்கன்று, அழகுச்செடிகள்... வினியோகம்! திருமணம், சுப நிகழ்ச்சிகளில் வழங்க யோசனை

கடலுார் : சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக, சுப காரியங்களில், பயன்தரும் பழ மரக்கன்றுகள், பூச்செடிகளை வழங்கிட தோட்டக்கலைத்துறை யோசனை தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.இயற்கை அமைப்பில் அமைந்துள்ள அனைத்து உயிரினங்களும் அவைகளின் பங்களிப்பை சிறப்பாக செலுத்துகின்றன. மனிதர்கள் மட்டும், சுய லாபத்திற்காக இயற்கையை அழிக்க தொடங்கி விட்டனர். அதன் விளைவாக, பருவம் தவறிய மழை, பெருவெள்ளம், புயல், புவி வெப்பமடைதல், ஓசோன் படலத்தில் ஓட்டை என பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.காடுகளில் உள்ள மரங்களும் வியாபார நோக்கத்தில் அழிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக, பருவ மழையளவு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.

மரங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பில் முக்கிய பங்களிக்கின்றன. ஒரு மரம் தனது ஆயுட்காலம் முழுவதிலும் 1 முதல் 1.6 டன் அளவு கார்பன் டை ஆக்சைடை உட்கிரகித்து, ஆக்சிஜனை வெளியிடுகிறது. இந்த காரணங்களால், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.அண்மை காலமாக விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சி போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு, மரக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது.

விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு, காய்கறி நாற்றுகள், பழச்செடிகள், பூச்செடிகள், அரியவகை மூலிகைகள் வழங்கப்படுகின்றன. இந்த பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடப்பாண்டில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பில், விழாக்கள், பண்டிகைகள், மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு, நடவு செடிகள், பழச்செடிகளை தரமானதாகவும், குறைந்த செலவிலும் வழங்கப்படுகின்றன.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் (டான்ேஹாடா) 63 அரசு தோட்டக்கலை பண்ணைகளும், 19 பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம் மற்றும் நெய்வேலியில் அரசு தோட்ட கலை பண்ணைகள் இயங்கி வருகின்றன.இப்பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, நாவல், முந்திரி, வேம்பு, புங்கம், தேக்கு, சவுக்கு, மல்லிகை, அரளி போன்ற செடிகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'அரசு தோட்டக்கலை பண்ணைகளில் அழகுச்செடிகள் 5 முதல் 10 ரூபாய் வரையிலும், மரக்கன்றுகள் ரூ.10 முதல் 20 வரை, பழச்செடிகள் ரூ.8 முதல் 60 ரூபாய் வரை, மலர்செடிகள் ரூ.8 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது.திருமணம் போன்ற விேஷச நிகழ்ச்சிகளுக்கு செடிகள் வழங்கினால் பயன் உள்ளதாக இருக்கும்.

செடிகள் பெற விரும்புவோர் அரசு தோட்டக்கலை பண்ணைகளை நேரடியாக அணுகி முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். தவிர இ-தோட்டம் செயலி வாயிலாகவும், கட்டணமில்லா தொலைபேசி எண் 18004254444 மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்' என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை