தங்கம் விலை கிடுகிடு: பவுன் 32 ஆயிரத்தை தாண்டியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கம் விலை கிடுகிடு: பவுன் 32 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து சவரன் ரூ. 32 ஆயிரத்து 96க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, தினமும் காலை மற்றும் மாலையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

நேற்று காலையில் தங்கத்தின் விலை கிராம் ரூ. 3980க்கும், சவரன் ரூ. 31 ஆயிரத்து 840க்கு விற்பனையானது. பின்னர் மாலையில் விலை சற்று குறைந்தது.

கிராமுக்கு 2 ரூபாயும், சவரனுக்கு ரூ. 16ம் குறைந்தது. இதனால் இன்று காலையில் தொடர்ந்து விலை குறையலாம் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இன்று காலையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

நேற்று மாலையில் விற்பனையான விலையை விட இன்று காலையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 34ம், சவரனுக்கு ரூ. 272ம் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ. 4012க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 32 ஆயிரத்து 96க்கும் விற்பனையானது.

இதுவரை தங்கத்தின் விலை ரூ. 32 ஆயிரத்தை தாண்டியது இல்லை. தற்போதுதான் முதல் முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது திருமண விசேஷங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவதை கவுரவமாக கருதி வந்தனர்.

தற்போது, விலை உயர்வால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தங்கத்தின் வாங்கும் திறம் பெருமளவில் குறைந்துள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகத்தான் இருக்கும் என்றும் விலை குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

 முன்பு, ஈரானில் ஏற்பட்ட போர் பதட்டம், ராணுவ தளபதி மீது தாக்குதல் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. அதன்பின்னர் அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் ஏற்பட்டதால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வந்தது.

தற்போது எல்லா பிரச்னைகளும் முடிந்தாலும், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பொருளாதாரத்தில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

இதனால் பல நாடுகளில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதில் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என்பதால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

.

மூலக்கதை