பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

தினகரன்  தினகரன்
பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

கர்நாடகா: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தை எழுப்பிய இளம்பெண்ணை தேசத்துரோக வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை 3 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் ஏ.ஐ.எம்.ஐ.எம். இஸ்லாமிய கட்சி எம்.பி ஓவைசியின் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மேடையில் முழக்கமிட்ட இளம்பெண் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, மஜத மாமன்ற உறுப்பினர் இம்ரான் பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் ஓவைசி பேசும் போது கூட்டத்தின் மேடையில் ஏறிய அமுல்யா என்ற இளம்பெண் பாகிஸ்தான் சிந்தாபாத் என மூன்று முறை கோஷமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக அமுல்யா மீது பாய்ந்ததோடு, அவர் பேசுவதை தடுத்து, ஒலிவாங்கியையும் பறித்தனர். இதையடுத்து, அவரை தடுக்க ஓவைசி முயன்ற போதும் அப்பெண் கேட்கவில்லை. இதனால் கூட்டத்தில் பரபரப்பு எழுந்தது. அந்த பெண்ணை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் கருத்தை மறுத்த அவர், இந்தியா சிந்தாபாத் என்பதே தமது கொள்கை என்று கூறினார். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

மூலக்கதை