இரக்கமே இல்லாமல் அடிச்சு தூக்கிய தங்கத்தின் விலை : வரலாற்றில் முதல்முறையாக சவரன் ரூ.32,096க்கு விற்பனை : கவலையில் பெண்கள்

தினகரன்  தினகரன்
இரக்கமே இல்லாமல் அடிச்சு தூக்கிய தங்கத்தின் விலை : வரலாற்றில் முதல்முறையாக சவரன் ரூ.32,096க்கு விற்பனை : கவலையில் பெண்கள்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.32 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. அங்குள்ள தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.  சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் கடந்த 13ம் தேதி ஆபரண தங்கம் மீண்டும் சவரன் 31,000ஐ தாண்டி, 31,112க்கு விற்பனையானது. கடந்த 16ம் தேதி சவரன் 31,392ஐ தொட்டது. 17ம் தேதி சற்று குறைந்தது. ஆனால், மீண்டும் நேற்று முன்தினம் கிராமுக்கு 24 உயர்ந்து 3,926க்கும், சவரனுக்கு 192 உயர்ந்து 31,408க்கும் விற்கப்பட்டது.சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) தங்கம் 1,612 டாலர் வரை உயர்ந்தது. இதன் எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் நேற்று முன்தினம் கிராமுக்கு 39 உயர்ந்து 3,965க்கும், சவரனுக்கு 312 அதிகரித்து 31,720க்கும் விற்பனையானது. இதுவே நகை வரலாற்றில் உச்சபட்ச விலையாக கருதப்பட்டது. இந்நிலையில்  நேற்று சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் 1,614 டாலர் வரை உயர்ந்து, பின்னர் 1,603 டாலர் வரை குறைந்தது. இதற்கேற்ப சென்னையில் ஆபரண தங்கம் நேற்று காலை சவரனுக்கு 120 அதிகரித்து 31,840 என்ற புதிய உச்சத்தை எட்டியது. மாலையில் சற்று குறைந்தது. இதன்படி, முந்தைய நாள் விலையை விட 104 உயர்ந்து 31,824க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,626 டாலரை தொட்டதை அடுத்து சென்னையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.32,096க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.34 உயர்ந்து ரூ.4,012க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை புதிய உச்சத்தை கண்டுள்ளது. அதே போல் வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை