சீனாவில் புதிதாக பாதிப்போர் எண்ணிக்கை குறைந்தது வீரியம் குறைகிறது கொரோனா வைரஸ்

தினகரன்  தினகரன்
சீனாவில் புதிதாக பாதிப்போர் எண்ணிக்கை குறைந்தது வீரியம் குறைகிறது கொரோனா வைரஸ்

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரசினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டி படைத்து வருகிறது. கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரசினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வந்தது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. காரணம், இந்த வைரசால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது பற்றி சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 394 ஆக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தற்போதுதான் குறைய தொடங்கியுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், ‘நேற்று முன்தினம் நோய் பாதிப்பினால் 114 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 108 பேர் வுகானை சேர்ந்தவர்கள். மொத்தமாக நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,576. இதுவரை, 2,118 பேர் இறந்துள்ளனர். 4,922 பேர் நோய் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றனர். ஹூபெய் மாகாணத்துக்கு வெளியே நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை கடந்த 3ம் தேதி 890 ஆக இருந்த நிலையில், நேற்று முன்தினம் புதிதாக நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 45 ஆக குறைந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து 1779 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் கொரோனா பாதித்த 16,155 பேர் சிகிச்சை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப் பட்டுள்ளது.டைமண்ட் பிரின்சசில் பயணிகள் 2 பேர் பலிகொரோனா வைரஸ் பரவிய ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து கடந்த 11ம் தேதி வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண், பெண் பயணிகள் நேற்று உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. உயிரிழந்த இருவரும் ஜப்பானை சேர்ந்தவர்கள். 80 வயதுடையவர்கள்.தென்கொரியாவில் முதல் உயிரிழப்புதென் கொரியாவில் கொரோனா வைரசினால் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து டேகு நகர மேயர் கூறுகையில், கொரோனா பரவுவது அதிகரித்துள்ளது. 25 லட்சம் மக்களும் வீடுகளுக்குள்ளே இருங்கள். வெளியே செல்ல வேண்டாம்.” என்றார்.

மூலக்கதை