கார்பன் மாசுவை குறைக்க இந்தியா எதுவும் செய்யவில்லை : நியூயார்க் முன்னாள் மேயர் பேச்சு

தினகரன்  தினகரன்
கார்பன் மாசுவை குறைக்க இந்தியா எதுவும் செய்யவில்லை : நியூயார்க் முன்னாள் மேயர் பேச்சு

வாஷிங்டன்: ‘‘கார்பன் மாசுவை குறைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில்தான் யாரும், எதுவும் செய்யவில்லை’’ என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஜனநாயக கட்சியைசேர்ந்த மைக்கேல் ப்ளூம்பெர்க் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் முன்னாள் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க். இந்தாண்டு இறுதியில் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இவர் போட்டியிட விரும்புகிறார். அதிபர் தேர்தல் வேட்பாளர்கள், இங்கு விவாதம் மூலம் ஓட்டெடுப்பு நடத்தி இறுதி செய்யப்படுகின்றனர். லாஸ்வேகாஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்த முதல் விவாதத்தில் ப்ளூம்பெர்க் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்்டும் என அதிபர் டிரம்ப் எடுத்த முடிவு கேலிக்கூத்தானது. இந்த விஷயத்தில், சீனா தான் நியாயப்படி செயல்பட்டுள்ளது.  கார்பன் மாசு வெளியேற்றத்தை குறைத்துள்ளது. இந்தியாவில் இது மிகப் பெரிய பிரச்னை. கார்பன் மாசுவை குறைக்க யாரும், எதுவும் செய்வதில்லை. சீனாவுடன் பேசினால், அங்கு கார்பன் மாசு வெளியேற்றத்தை மேலும் குறைக்கலாம். கார்பன் மாசுவை குறைக்க வில்லை என்றால், அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு என்பதை உணர நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.  சீனாவுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க நான் விரும்பவில்லை. சீனா,  இந்தியா, மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இல்லாமல் மாசு  பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. அதிபர் ஆனால், முதல் நாளில் செய்யும் வேலை, மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்காவை இணைப்பதுதான். இவ்வாறு அவர் பேசியுள்ளார். 2030ம் ஆண்டுக்குள் கார்பன் மாசுவை 30 முதல் 35% குறைக்கவும், காடுகளை கூடுதலாக வளர்த்து 2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பனை கூடுதலாக குறைப்பதாகவும், பாரீஸ் ஒப்பந்தத்தில் இந்தியா உறுதி அளித்துள்ளது.

மூலக்கதை