ரஞ்சி: பார்த்திவ் படேல் சதம் | பெப்ரவரி 20, 2020

தினமலர்  தினமலர்
ரஞ்சி: பார்த்திவ் படேல் சதம் | பெப்ரவரி 20, 2020

வல்சாத்: கோவா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் கேப்டன் பார்த்திவ் படேல் சதம் கடந்து கைகொடுக்க குஜராத் அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடக்கும் காலிறுதியில் குஜராத், கோவா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று ‘பேட்டிங்’ தேர்வு செய்த குஜராத் அணிக்கு சமித் கோஹல் (52), பார்கவ் மெராய் (84) நம்பிக்கை அளித்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் பார்த்திவ் படேல் சதம் கடந்தார்.

முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் குஜராத் அணி 4 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்திருந்தது. பார்த்திவ் (118), சிராக் காந்தி (40) அவுட்டாகாமல் இருந்தனர்.

மஜும்தார் அபாரம்: ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடக்கும் காலிறுதியில் பெங்கால், ஒடிசா அணிகள் விளையாடுகின்றன. கவுசிக் கோஷ் (9), கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (7), அபிஷேக் ராமன் (1), மனோஜ் திவாரி (4) ஏமாற்றினர். அசத்தலாக ஆடிய அனுஸ்துப் மஜும்தார் சதம் கடந்தார். ஷபாஸ் அகமது அரைசதமடித்தார்.

முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் பெங்கால் அணி 6 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. மஜும்தார் (136), ஷபாஸ் அகமது (82) அவுட்டாகாமல் இருந்தனர்.

வெளிச்சமின்மை பாதிப்பு: ஜம்முவில் நடக்கும் காலிறுதியில் கர்நாடகா, காஷ்மீர் அணிகள் விளையாடுகின்றன. கர்நாடகா அணி 6 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 14 ரன் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்தானது.

சவுராஷ்டிரா திணறல்: ஆந்திராவில் நடக்கும் காலிறுதியில் சவுராஷ்டிரா, ஆந்திரா அணிகள் விளையாடுகின்றன. விஷ்வராஜ் ஜடேஜா (73), ஷெல்டன் ஜாக்சன் (50), சிராக் ஜானி (53*) கைகொடுக்க, முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சிங் சவுராஷ்டிரா அணி 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்திருந்தது.

மூலக்கதை