வரி ஏய்ப்புக்கு 'கல்தா!' நடைமுறைக்கு வருகிறது 'இ இன்வாய்ஸ்': போலி பில்களுக்கு இனி வாய்ப்பு இல்லை

தினமலர்  தினமலர்
வரி ஏய்ப்புக்கு கல்தா! நடைமுறைக்கு வருகிறது இ இன்வாய்ஸ்: போலி பில்களுக்கு இனி வாய்ப்பு இல்லை

திருப்பூர்:வரி ஏய்ப்பு, போலி பில்களை ஒழிக்கவே, ஜி.எஸ்.டி.,ல், இ- இன்வாய்ஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது' என, தொழில்துறையினருக்கான கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில், மத்திய பட்ஜெட் மற்றும் 'இ- இன்வாய்ஸ்' குறித்த கருத்தரங்கம், அவிநாசி ரோட்டில் உள்ள ஆர்.கே., ரெசிடென்ஸியில் நேற்று நடந்தது.
சி.ஐ.ஐ., மாவட்ட கவுன்சில் தலைவர் பாலன் தலைமை வகித்தார்.நேரடி வரிகள் குறித்து பி.எஸ்.ஆர்., அண்ட் கோ இயக்குனர் ஸ்ரீதர் பேசியதாவது:ஆடிட்டர், ஆலோசகர்களின் துணையின்றி, தனிநபர் எளிதாக வருமான வரி தாக்கல் செய்யமுடியும் என, நிதி அமைச்சர் தெரிவித்தார். பல்வேறு செலவினங்களை கழிப்பதற்கு வாய்ப்பு அளிக்கும் பழைய வரி விதிப்பு; எவ்வித வரிக் கழிவும் செய்யமுடியாத புதிய வரி விதிப்பு இதில் எதை பின்பற்றுவது என்கிற கேள்வி, குழப்பம் வரி செலுத்துவோருக்கு எழுகிறது; இதை தீர்ப்பதற்கு, ஆலோசகர்களின் உதவி தேவைப்படுகிறது.இவ்வாறு ஸ்ரீதர் பேசினார்
.'இ- இன்வாய்ஸ்' குறித்து கே.பி.எம்.ஜி., இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் பேசியதாவது:பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் முதலில் குறிப்பிட்டது, ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் தாக்கல் எளிமைப்படுத்தப்படுகிறது என்பதுதான்; வரும் ஏப்ரல் மாதம் முதல் இது நடைமுறைக்குவருகிறது.
ஜி.எஸ்.டி., ரீபண்ட் நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன.வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், ஆண்டு வர்த்தகம் 100 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள நிறுவனங்கள், 'இ-- இன்வாய்ஸ்' நடைமுறையை கடைபிடிப்பது கட்டாயமாகிறது. இதன்மூலம், வர்த்தகம் சார்ந்த அனைத்து விவரங்களும் வரித்துறை வசம் சென்றடையும்.'இ- இன்வாய்ஸ்' நடைமுறைக்கு வருவதற்கு முக்கியமான காரணம், போலி பில், வரி ஏய்ப்புதான். இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 'இ- இன்வாய்ஸ்' மூலம், முறைகேடுகள் தடுக்கப்படும்.அரசு தளத்தில் வர்த்தக விவரங்களை பதிவு செய்து பெறுவதுதான் 'இ- இன்வாய்ஸ்' என பலரும் நினைக்கின்றனர்; அவ்வாறில்லை.
வழக்கம்போல ரசீதுகளை உருவாக்கி, அவ்விவரங்களை, போர்ட்டல் தளத்தில் அளிக்கவேண்டும்.அதனடிப்படையில், டிஜிட்டல் கையொப்பம், கியூ.ஆர்.கோடு, ஐ.ஆர்.என்., நம்பருடன் கூடிய இன்வாய்ஸ் வழங்கப்படும். ஒரு இன்வாய்சில் இம்மூன்றும் இடம்பெற்றிருக்க வேண்டும்; இல்லையெனில் அந்த இன்வாய்ஸ் செல்லாததாகிவிடும்.இவ்வாறு, அவர் பேசினார்.
திருப்பூர் பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள், ஆடிட்டர்கள் பங்கேற்று, தங்கள் சந்தேகங்களை கேட்டு, தெளிவு பெற்றனர்.சி.ஐ.ஐ., மாவட்ட கவுன்சில் துணை தலைவர் திருக்குமரன் நன்றி கூறினார்.

மூலக்கதை