ஆகா... விசாகா! 'தினமலர்' செய்தி எதிரொலி24ம் தேதி கூடுகிறது கமிட்டி!

தினமலர்  தினமலர்
ஆகா... விசாகா! தினமலர் செய்தி எதிரொலி24ம் தேதி கூடுகிறது கமிட்டி!

கோவை:கோவை மாவட்டத்தில் பணி மற்றும் பணிசாரா பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், விசாகா கமிட்டி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம், வரும் 24ம் தேதி நடத்தப்படவுள்ளது. இப்படி ஒரு கமிட்டி இருப்பதை, அரசு இயந்திரத்துக்கு, நமது நாளிதழ் செய்தி வாயிலாக, ஞாபகப்படுத்தியதன் காரணமாக, மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொண்டுள்ளது.பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், 2013ம் ஆண்டில் மத்திய அரசு சட்டம் இயற்றியது.
இதன்படி, பத்துக்கும் மேல் ஊழியர்களை கொண்ட ஒரு அலுவலகம் அல்லது நிறுவனத்தில், கட்டாயம் ஐ.சி.சி., என்று கூறப்படும் புகார் (விசாகா) கமிட்டியை அமைத்திருக்க வேண்டும்.பத்துக்கும் குறைவாக உள்ள வீட்டு வேலை, ஆட்டோ ஓட்டுதல், மளிகை கடை போன்ற அமைப்பு சாராத தொழிலில் ஈடுபடும் பெண்களுக்காக,மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எல்.சி.சி., என்று கூறப்படும், உள்ளூர் புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
ஆனால், கோவை மாவட்டத்தில் இக்கமிட்டிபெரும்பாலான அரசுத்துறைகளில் பெயரளவிலும், 80 தனியார் நிறுவனங்களில் அமைக்கப்படாமலும் இருந்தது.கடந்த, ஜனவரியில் இதுகுறித்த செய்தி, நமது நாளிதழில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, ஜன., இறுதிக்குள் அனைத்து தனியார் நிறுவனங்களிலும், விசாகா கமிட்டி கட்டாயம் அமைக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.
தொடர்ந்து, விசாகா கமிட்டி பிரதிநிதிகள், உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், வரும் 24ம் தேதி கூட்ட, கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக புகார் அளிக்கும் வகையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகார் பெட்டி பொருத்தப்படவுள்ளது.
விசாகா கமிட்டி முழுமையாக செயல்பட, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாது, அமைப்பு சாரா இடங்களில் பணிபுரியும் பெண்கள், வீட்டில் பணிக்கு செல்லாமல் இருக்கும் பெண்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவிகள் என, அனைத்து தரப்பிலும் பாதுகாப்பை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளோம். புகார் கொடுப்பவர்களின் பெயர், விபரம் வெளிப்படுத்தப்படாது. எவ்வித தயக்கமும் இன்றி, பெண்கள் புகார் அளிக்க முன்வரலாம்.-ராஜாமணி கோவை கலெக்டர்.

மூலக்கதை