ஜெர்மனியில் மர்ம கும்பல் திடீர் தாக்குதல் 2 மதுபான பார்களில் 9 பேர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் செயலா என சந்தேகம்

தினகரன்  தினகரன்
ஜெர்மனியில் மர்ம கும்பல் திடீர் தாக்குதல் 2 மதுபான பார்களில் 9 பேர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் செயலா என சந்தேகம்

ஹனாவ்:  ஜெர்மனியில் இரண்டு மதுபான பார்களில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.ஜெர்மனியின் ஹனாவ் நகரில் உள்ள மதுபான பார்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருந்தன. மக்கள் மது அருந்தி உற்சாகமாக இருந்தனர். அப்போது, திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் சிலர், கண்மூடித்தனமாக  துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், நுழைவு வாயிலேயே 3 பேர் குண்டு பாய்ந்து பலியாகினர். இந்த மதுபான பார், பிராங்க்பர்ட்டில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தாக்குதல் நடத்திய பிறகு, அந்த கும்பல் காரில் தப்பி சென்றது.சிறிது நேரத்தில், ஏரேனாவில் உள்ள மதுபான பாரில் புகைப் பிடிக்கும் பகுதிக்கு சென்ற மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், பெண் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். கொல்லப்பட்ட அனைவரும் குர்தீஷ் வம்சாவளியை சேர்ந்தவர்கள்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார், 30 வாகனங்களில் இயந்திர துப்பாக்கிகளுடன் அங்கு விரைந்தனர். சம்பவம் நடந்த பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மதுபான பார்களிலும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இந்நிலையில், காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாேனார் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதனிடையே, இரண்டு பார்களிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர், ஹனாவில் உள்ள தனது வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த வீட்டில் மற்றொரு சடலமும் மீட்கப்பட்டது. இவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 2 பார்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருப்பதால், இது தீவிரவாத செயலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மூலக்கதை