நிர்பயா வழக்கில் மார்ச் 3ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா?: குற்றவாளிகளில் ஒருவன் தற்கொலை முயற்சி

தினகரன்  தினகரன்
நிர்பயா வழக்கில் மார்ச் 3ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா?: குற்றவாளிகளில் ஒருவன் தற்கொலை முயற்சி

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா சிறை அறையில் உள்ள சுவற்றில் தலையை மோதி தற்கொலைக்கு முயன்றதால் காயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா(23) கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதையடுத்து வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அக்ஷய் சிங் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய 4 குற்றவாளிகளையும் கடந்த 1ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான சிக்கல் ஏற்பட்டதால் அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.இதில் கருணை கேட்டு தாக்கல் செய்த மனுக்களில் பவன் குமாரை தவிர்த்து அனைத்தையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்ககோரி திகார் சிறை நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், கடந்த 17ம் தேதி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.அதில், “நிர்பயா, பாலியல் வழக்கில் கொலை குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வரும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும்’’ என்று, புதிய தேதியை வெளியிட்டு உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான ஆணை சிறை நிர்வாகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதால், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் திகார் சிறையில் நடந்து வருகிறது.இந்த நிலையில் திகார் சிறை நிர்வாகத்தின் தரப்பில் நேற்று ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘நிர்பயா கொலை குற்றவாளி நான்கு பேரில் ஒருவரான வினய் சர்மா கடந்த 16ம் தேதி அவர் அடைக்கப்பட்டுள்ள அறையின் சுவற்றில் தலையை பலமுறை வேகமாக மோதி தன்னைத்தானே வருத்திக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். இதில் வினய் சர்மாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து மருத்துவ சிகிச்சை தற்போது சிறை நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.தூக்கு தண்டனை கைதிகளின் உடலில் ஏதேனும் காயம் இருந்தால், அவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என சட்ட விதிகளில் உள்ளது. மேலும் வினையை தவிர மற்ற குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதனால் மூன்றாவது முறையாக திட்டமிட்டப்படி நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 3ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என தற்போது கேள்வியெழுந்துள்ளது. இந்த நிலையில் வினய் சர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் விசாரணை நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “வினய் சர்மா மனநோய் மற்றும் உடல் ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளதால், அவருக்கு சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்த பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா, இதுதொடர்பாக திகார் சிறை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு, வழக்கை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மூலக்கதை