டிரம்ப்பை வரவேற்கப்போவது 70 லட்சம் பேர் அல்ல; 1 லட்சம் பேர் மட்டுமே: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
டிரம்ப்பை வரவேற்கப்போவது 70 லட்சம் பேர் அல்ல; 1 லட்சம் பேர் மட்டுமே: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத் வரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியில் 70 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், ஒரு லட்சம் பேர் மட்டுமே இதில் பங்கேற்பார்கள் என அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் 2 நாள் அரசு முறை பயணமாக வருகிற 24ம் தேதி இந்தியா வருகின்றனர். அப்போது, அகமதாபாத் வரும் டிரம்புக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பு அளிப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். சமீபத்தில் வெளியான வீடியோவில் அதிபர் டிரம்ப், குஜராத் விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை 70 லட்சம் பேர் திரண்டு என்னை வரவேற்பார்கள் என பிரதமர் மோடி கூறியதாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், டிரம்ப் நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நேரா நேற்று கூறுகையில், “அதிபர் டிரம்ப்பின் வரவேற்பு நிகழ்ச்சியில் 70 லட்சம் பேர் கலந்து கொள்ளவில்லை. ஒரு லட்சம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,”  என்றார். சில நாட்களுக்கு முன் விஜய் நேரா வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவிலும், ‘ டிரம்ப்பின் 22 கிமீ வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள். இந்திய கலாசாரத்தை உலகுக்கு காண்பிப்பதற்கான அரிய வாய்ப்பு அகமதாபாத்துக்கு கிடைத்துள்ளது,’ என்று கூறியிருந்தார். இப்போதும், அதையே  தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் பயண திட்டத்தின்படி, அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் டிரம்ப்பை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்கிறார். அங்கிருந்து இருவரும் முதலில் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். அங்கிருந்து எஸ்பி ரிங் ரோடு வழியாக மொடேராவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்ேபெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

மூலக்கதை